இலங்கையைச் சேர்ந்த நதிஷா குணரத்ன மற்றும் தேஜானி குணரத்ன ஆகியோர் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தின் 168 வருட வரலாற்றில் கலாநிதி பட்டம் பெற்ற முதலாவது இரட்டை சகோதரிகள் என்ற சாதனையை படைத்துள்ளனர்.
இவர்கள் இருவரும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் உணவு விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தை பயின்ற பின்னர் 2016 ஆம் ஆண்டு மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி படிப்பைத் ஆரம்பித்தனர்.
பல்கலைக்கழகத்தின் இணையதள தகவல்களின்படி சர்வதேச இரட்டையர்கள் தினத்துக்கு முந்தைய நாளான டிசம்பர் 17 அன்று இருவரும் முனைவர் பட்டம் பெற்றனர்.
அவர்களது முனைவர் பட்டங்களுக்காக சொக்லேட் மீதான நுகர்வோரின் உணர்ச்சி மற்றும் உணர்வுகளை அளவிடுவதற்கும் பகுப்பாய்வு செய்வதற்கும் இருவரும் புதிய வழிகளை ஆராய்ந்தனர்.
மெல்போர்ன் பல்கலைக்கழகம், பட்டமளிப்பு விழா ஆரம்பத்தில் மார்ச் 2020 இல் நடைபெறத் திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும் கொவிட் -19 தொற்று காரணமாக அந்த விழா தாமதப்படுத்தப்பட்டிருந்ததாக பல்கலைக்கழகத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

