எனது பதவிக்காலத்தில் இந்தியாவுடனான உறவை மேம்படுத்த விரும்பினேன்: இம்ரான் கான்

85 0

பாகிஸ்தானில் பதவி நீக்கம் செய்யப்பட்ட இம்ரான் கான், தனது இல்லத்தில் வெளிநாட்டு செய்தியாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது இந்தியாவுடனான உறவை மேம்படுத்துவது தொடர்பாக அவர் கூறியதாவது:-

எனது மூன்றரை வருட பதவிக் காலத்தில் இந்தியாவுடனான உறவை மேம்படுத்த விரும்பினேன். ஆனால் ஆர்எஸ்எஸ் சித்தாந்தமும், ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த நடவடிக்கையும் அதற்கு தடையாக அமைந்துவிட்டது. 2019 இல் காஷ்மீரின் அந்தஸ்தை இந்தியா ரத்து செய்த பிறகு, எனது அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. இந்தியா முதலில் தனது முடிவை மாற்றிக் கொண்டு அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். இவ்வாறு அவர் கூறினார்.

அவரது பதவிக் காலத்தில் இந்தியாவுக்கான வெளியுறவுக் கொள்கையை செயல்படுத்தியது யார்? என்ற கேள்விக்கு பதிலளித்த இம்ரான் கான், ‘நான்தான் பாஸ். நான் வெளியுறவுக் கொள்கையை செயல்படுத்திக்கொண்டிருந்தேன். என்னை விடுங்கள். ஜெனரல் பஜ்வா இந்தியாவுடன் சிறந்த உறவை வைத்துக் கொள்வதில் இன்னும் அதிக விருப்பம் கொண்டிருந்தார், என குறிப்பிட்டார்.

‘வலதுசாரிக் கட்சியைச் சேர்ந்த ஒரு தலைவரால் (மோடி) பிரச்சனையை தீர்க்க முடியும் என்று நான் இன்னும் நம்புகிறேன். மோடி வலதுசாரி கட்சியில் இருந்து வந்தவர், அதனால் அவர் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும், காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று நான் விரும்பினேன்.

ஆனால் இதுபோன்ற எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு காண்பதை அந்த கட்சி எதிர்க்கிறது. எனினும், 2019 ஆகஸ்ட் 5 அன்று, அரசியலமைப்பின் 370வது பிரிவை இந்தியா ரத்து செய்த பின்னர் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் முறிந்தன’ என்றும் இம்ரான் கான் தெரிவித்தார்.