ஆணைக்குழுவின் நடவடிக்கைகளில் எவ்வித அரசியல் தலையீடுகளும் இடம்பெறாது

204 0

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான முழுமையான அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிடம் காணப்படுகிறது.

அதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதில் எவ்வித அரசியல் தலையீடுகளும் இடம்பெறமாட்டாது என நீதித்துறை, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை (டிச. 18) மத்துபீட மகாநாயக்க தேரரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தேர்தலை நடத்தக் கூடிய முழுமையான அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கே காணப்படுகிறது. தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளையும் ஆணைக்குழு தொடர்ச்சியாக முன்னெடுத்துள்ளது. அதில் எவ்வித அரசியல் தலையீடுகள் காணப்படாது.

போதைப்பொருள் தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்பட்டமையின் காரணமாகவே , ஐஸ் உள்ளிட்ட மேலும் பல போதைப்பொருட்கள் தடை செய்யப்பட்ட நச்சு தன்மையுடைய மருந்து பட்டியலில் சேர்க்கப்பட்டன.

அதே போன்று 5 கிராமிற்கும் அதிகளவு ஐஸ் போதைப்பொருளை வைத்திருக்கும் சந்தேகநபர்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

மேலும் வழக்கு விசாரணைகளுக்காக நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டிருக்கும் போதைப்பொருட்கள் மீண்டும் சமூகத்திற்குள் செல்வதை தவிர்ப்பதற்காக , பரிசோதனைக்கான சிறிதளவு மாதிரிகளை மாத்திரம் வைத்துக் கொண்டு எஞ்சியவற்றை உடனடியாக அழிப்பதற்கான சட்ட ஏற்பாடுகளும் தயாரிக்கப்பட்டுள்ளன.

இவற்றை உள்ளடக்கிய சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டு ஒரு மாதம் நிறைவடைவதற்கும் , பல சுற்றி வளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டு அவற்றுடன் தொடர்புடைய சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதற்கமைய இனியொரு போதும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் போதைப்பொருட்கள் மீண்டும் சமுகத்திற்குள் பகிரப்படாது என்றார்.