கைப்பையை திருடிக்கொண்டு ஓடிய நபர் துரத்திச் செல்லப்பட்டு கைது

163 0

பாணந்துறை  போக்குவரத்து  பிரிவு  பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரின் உடனடி நடவடிக்கையினால் ஹொரணை பொக்குனுவிட்ட சந்தியில் பெண் ஒருவரின் கைப்பையை திருடிக்கொண்டு ஓடிய நபர் துரத்திச் செல்லப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று (19) காலை இடம்பெற்றுள்ளது.

இன்று திங்கட்கிழமை காலை 7.45 மணியளவில் ஹொரணை பகுதியிலிருந்து எம்பிலிப்பிட்டிய பகுதிக்குச் செல்லும் பஸ்ஸுக்காக காத்திருந்த பெண் ஒருவர் எம்பிலிப்பிட்டிய பஸ் வந்தவுடன் பஸ்ஸில் ஏற  முயன்றுள்ளார். இதன்போது அவரின் கைப்பையை நபர் ஒருவர் பறித்து சென்றுள்ளார்.

இது தொடர்பில் பஸ்ஸிலிருந்த  பயணிகள் உடனடியாக பொக்குனுவிட்ட சந்தியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பாணந்துறை பிரிவு போக்குவரத்து பிரிவின் சார்ஜன்ட் ரொஷான் பெரேரா மற்றும் சார்ஜன்ட் டபிள்யூ.டி.துஷாரா ஆகியோருக்கு தகவல் வழங்கியதையடுத்து, உடனடியாக செயற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் சந்தேக நபர்  வயல் ஊடாக தப்பிச் செல்வதை கண்டுள்ளனர்.

இதனையடுத்து விரைந்து  செயற்பட்ட பொலிஸார், சந்தேக நபரை வயல்வெளிகள் ஊடாக துரத்திச் சென்று பிரதேசவாசிகளின் உதவியுடன் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் புளத்சிங்கள பிரதேசத்தில் வசிக்கும் போதைக்கு அடிமையானவர் என்பதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளுக்காக ஹொரண பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.