நாட்டில் தற்போது தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது மக்களின் நிலைப்பாடு அல்ல. எவ்வாறிருப்பினும் எந்த சந்தர்ப்பத்திலும் எந்தவொரு தேர்தல் நடத்தப்பட்டாலும் அதனை எதிர்கொள்ள பொதுஜன பெரமுன தயாராக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபே குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். பொதுஜன பெரமுன எந்த சந்தர்ப்பத்திலும் தேர்தலுக்கு தயாராகவே உள்ளது. தேர்தலை கண்டு அஞ்சுபவர்கள் நாம் அல்ல. வரலாற்றில் எந்தவொரு தேர்தலையும் காலம் தாழ்த்தாத ஒரேயொரு கட்சி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மாத்திரமேயாகும்.
‘முன்னோக்கிச் செல்வோம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் தேர்தலை எதிர்கொள்வதற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளோம். இவற்றை சகல கிராம உத்தியோகத்தர் மட்டத்திலும் நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்தோம்.
ஆனால் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்திக் கொண்டிருக்கும் எந்தவொரு எதிர்க்கட்சியும் இன்னும் அதற்கு தயாராகவில்லை. எனவே தான் தற்போது உள்ளுராட்சி மன்றத் தேர்தல் அவசியமற்றது என்றும், பாராளுமன்றத் தேர்தலை நடத்துமாறும் கோருகின்றனர். அரசியலமைப்பின் படி செயற்பட வேண்டும் என்று கூறிக் கொண்டிருக்கும் எதிர்க்கட்சிகள், இன்று அதனை மீறி பாராளுமன்றத் தேர்தலுக்கு செல்லுமாறு வலியுறுத்துகின்றன.
இதற்கான காரணம் என்ன என்பது எமக்கு தெரியாது. எவ்வாறிருப்பினும் மக்களிடம் சென்று தற்போது அவர்களுக்கு தேர்தல் வேண்டுமா என்பதை கேட்க வேண்டும். காரணம் நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தேர்தல் செலவுகளையும் சுமப்பதற்கு மக்கள் விரும்பமாட்டார்கள். எனினும் அவற்றை மீறி தேர்தல் நடத்தப்படுமெனில் அதற்கு நாம் தயாராகவே உள்ளோம் என ரோஹித அபே குணவர்தன தெரிவித்துள்ளார்.

