உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தையின் போது தமிழர் தரப்பு விட்டுக்கொடுக்க முடியாதவை! அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை

352 0

உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தையின் போது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்திற் கொள்ள வேண்டிய அடிப்படைக் கோட்பாடுகள், மற்றும் பிரதான அம்சங்கள் ஆகியனவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி முக்கிய தமிழ்ப் புலம்பெயர் அமைப்புக்கள் கூட்டாக ஒரு கடிதத்தை அனுப்பி வைத்துள்ளன.

இக்கடிதத்தைக் கனேடிய தமிழர் தேசிய அவை, டெனிஷ் தமிம் அமைப்புக்களின் ஒன்றியம், இத்தாலி ஈழத் தமிழர் மக்கள் அவை, தமிழீழ மக்கள் பேரவை – பிரான்சு, ஜேர்மன் ஈழத் தமிழர் மக்கள் அவை, நியூசிலாந்து தமிழர் தேசிய அவை, நெதர்லாண்ட் ஈழத் தமிழர் பேரவை, நோர்வே ஈழத் தமிழர் அவை, சுவிஸ் ஈழத் தமிழரவை, தமிழர் பண்பாட்டுக் கழகம் பெல்ஜியம, ஆகிய அமைப்புக்களே கூட்டாக அனுப்பி வைத்துள்ளன.

தமிழ் மக்கள் சரர்பில் இலங்கை அரசாங்கத்துடன் எந்தப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட முன்னர் கீழே தரப்பட்டுள்ள தமிழ் மக்களினது பேரம்பேசப்பட முடியாத அடிப்படைக் கோட்பாடுகளையும் பிற முக்கிய அம்சங்களையும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்திற்கொள்ள வேண்டுமென அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

1. இலங்கைத் தீவில் தற்போது நிலவுகின்ற பொருளாதாரச் சிக்கலோடு பொறுப்புக்கூறல், தமிழர்மீதான இனப்படுகொலைக்கு நீதி வழங்கல் ஆகிய பாரிய அழுத்தங்கள் காரணமாக இலங்கை அரசாங்கமானது தமிழ் மக்களுடன் தாம் நல்லிணக்கத்தை பேண முயற்சிப்பதாக அனைத்துலகச் சமூகத்திற்குக் காட்ட வேண்டிய நிரப்;பந்தத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. எழுபது ஆண்டுகாலமாக அடுத்தடுத்து வந்த அரசுகளின் ஏமாற்று வரலாற்றின் பின்னணியில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை எவ்வித முன் நிபந்தனைகளுமின்றி பேச்சுவார்தைகளுக்கு வருமாறு சனாதிபதி அழைத்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

2. ஓற்றை ஆட்சி முறையிலான தற்போதைய அரசியலமைப்பு, அதன் 13ஆம் சட்டதிருத்தம், ஏற்கனவே தோல்வியடைந்த மாகாணசபை முறைமை ஆகியன தமிழர் தேசிய இனத்தின் நியாயபூர்வமான அபிலாசைகளைத் தீர்ப்பனவாக இல்லை. நாட்டின் இந்த ஓற்றையாட்சிப் படிநிலைக் கட்டமைப்பு அகற்றப்படும்வரை சமஸ்டி முறையான ஒர் அரசியலமைப்புக்கூட நடைமுறைச் சாத்தியப்பட மாட்டாது.

3. இந்திய அரசினால் ஒழுங்குசெய்யப்பட்ட திம்புப் பேச்சுவார்த்தைகள், தமிழ் மக்கள் பேரவையின் 2016ஆம் ஆண்டைய முன்மொழிவுகள் உட்பட வரலாற்று ரீதியாகப் பலதடவைகள் தமிழ் மக்கள் தம் அடிப்படை அரசியல் கோட்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளனர். பேரம்பேசமுடியாத அந்த அடிப்படைக் கோட்பாடுகளாவன: 1) தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம், 2) தமிழ் மக்கள் விட்டுக்கொடுக்க முடியாத தன்னாட்சியுரிமை உடையவர்கள், 3) வரலாற்று ரீதியாகவும் பாரம்பரியமாகவும் இலங்கைத் தீவின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் பிரித்தெடுக்க முடியாத ஒன்றிணைந்த தமிழர் தாயகமாக இருந்து வந்துள்ளது. தமிழ் மக்களின் இம் மூன்று அடிப்படைக் கோட்பாடுகளை இலங்கை அரசாங்கம் பகிரங்கமாக அங்கீகரித்த பின்னரே எந்தப் பேச்சுவார்த்தையும் தொடங்கப்பட வேண்டும்.

மேலும், எந்த உத்தியோக பேச்சுவார்த்தைகளின் போதும் கவனத்திற்கொள்ள வேண்டிய முக்கிய விடயங்களாகத் தமிழ் மக்கள் அவையின் 2016 ஆண்டின் முன்மொழிவுகளில், பின்வருவன எடுத்துரைக்கப்பட்டுள்ளன என்பதனையும் புலம் பெயர் தமிழ் அமைப்புக்கள் கோடிட்டுக் காட்டியுள்ளன.

4. எந்தவொரு அரசியலமைப்பையும் வகுக்க முனையும் முன்னர் ஓர் ஒப்பந்த வடிவில் (டேயிற்ரன் ஒப்பந்தம் மற்றும் பெரிய வெள்ளி ஒப்பந்தம); போன்ற அரசியலமைப்புக்கு முன்பான ஒப்பந்தம் ஒன்று அவசியம். இந்த ஒப்பந்தத்தில் தமிழ்த் தேசத்தின் சுயநிர்ணய உரிமை, அதன் இறையாண்மை, அதற்குரிய ஆட்சி அதிகாரங்கள் ஆகியனவற்றோடு தமிழ் மக்கள் வரலாற்றுரீதியாக வாழ்ந்துவந்த அவர்களது பாரம்பரியத் தாயகம் ஆகியன அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

5.மேலும் இந்த ஒப்பந்தத்தில் மற்றைய அம்சங்களோடு பொறுப்புக்கூறலுக்கும் நீதிக்குமான வழிமுறைகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள், அரசியற் கைதிகளின் விடுதலை, இராணுவத்தால் வடக்கு-கிழக்கில் கைப்பற்றப்பட்டுள்ள காணிகளை விடுவித்தல், நிலைகொண்டுள்ள இராணுவத்தை அகற்றுதல், அரசினால் மேற்கொள்ளப்படுகின்ற குடியேற்றங்களை நிறுத்துதல், பாதுகாப்புத்துறைச் சீர்திருத்தம், ஆகியவற்றோடு இவ்வாறான குற்றங்கள் எதிர்காலத்தில் மீண்டும் நடைபெறாதிருப்பதற்கான உத்தரவாதம் ஆகியன உள்ளடக்கப்பட வேண்டும். மேற்கூறியவற்றைச் செயற்படுத்துவதற்கான நிலைமைகள் வடக்குகிழக்கில் உருவாக்கப்பட்டாலேயன்றி அரசியல் மற்றும் அரசியலமைப்பு ஆகியனபற்றிச் சுதந்திரமாகக் கலந்துரையாடுவதற்கு ஏற்ற ஒரு பாதுகாப்பான சூழல் உருவாக முடியாது.

6. ஒப்பந்தத்தில் அடங்கியுள்ள ஏதாவதை எண்ணிக்கையில் கூடிய சிங்கள பவுத்த பெரும்பான்மையினரோ அவர்களின் அரசியல் பிரதிநிதிகளோ பக்கச் சார்பாக இரத்துச் செய்தால், ஒப்பந்தத்தின் அடிப்படைக் கோட்பாடுகளைக் கடைப்பிடிக்கச் செய்வதற்கான பிறிதேதும் சாத்தியமான வழிமுறைகள் இல்லாவிடத்து, தமிழ் மக்கள் தங்களது அரசியல் நிலைப்பாட்டைத் தீர்மானிப்பதற்கென ஒரு பொதுசன வாக்கெடுப்பை நடத்துவதற்கான வழிமுறைறையை எந்த ஒப்பந்தமும் கொண்டிருத்தல் அவசியம்.

7. அவ்வாறான ஒப்பந்தமானது மூன்றாம் தரப்பு ஒன்றினால் எழுத்துறுதி செய்யப்படுதல் வேண்டும்

இலங்கை அரசாங்கத்துடன் மேற்கொள்கின்ற எல்லா உத்தியோக பேச்சுவார்த்தைகளின் போதும், தமிழ் மக்களின் மேற்கூறிய அடிப்படைக் கோட்பாடுகளையும் முக்கிய அம்சங்களையும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பின்பற்ற வேண்டுமெனப் புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் முதன்மை அமைப்புக்கள் வலுவாக வற்புறுத்தியுள்ளன.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள, பேரம்பேச முடியாத தமிழ் மக்களின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு அமைய, பேச்சுவார்த்தைகளில் நடுவர்நிலை வகித்து பங்காற்றுமாறு அனைத்துலகச் சமூகத்தை நாம் வேண்டிக் கொள்கின்றோம். தமிழ் மக்களின் நியாயபூர்வமான அபிலாசைகளுக்கு ஒரு நிரந்தர அரசியல் தீர்வு வழங்கப்பட்ட பின்னரே இலங்கைக்கு நிதியுதவி வழங்க வேண்டுமென ஐ.எம்.எவ், உலக வங்கி மற்றும் எ.டி.பி. உட்பட அனைத்துலகச் சமூகத்திடம் வற்புறுத்துகின்றோம்.

நன்றி

அனைத்துலக ஈழத் தமிழர் மக்களவை