கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் கரோனா வைரஸ் தோன்றி, உலகம் முழுவதும் பரவி லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். பல்வேறு நாடுகளில் கரோனா தொற்று குறைந்துள்ள நிலையில், வைரஸ் தோன்றிய சீனாவில் மீண்டும் அது பெருக்கெடுத்துள்ளது. குறிப்பாக அங்கு ஒமைக்ரான் வகை வைரஸ் அதிகமாக பரவி வருகிறது.
கடந்த நவம்பர் மாதம் முதல் கரோனா பெருந்தொற்றைத் தடுக்கசீன அரசு பொது முடக்கம், போக்குவரத்து கட்டுப்பாடு உள்ளிட்டவற்றை அமல் செய்தது. இதற்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் கரோனா தொற்று கெடுபிடிகளை அரசு தளர்த்தியுள்ளது.
இந்நிலையில் தலைநகர் பெய்ஜிங்கில் கரோனா அதிகரித்துள்ளது. 2.2 கோடி மக்கள் வசிக்கும் இந்த நகரில் கரோனாவால் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.
இதனால் இறுதிச் சடங்கு செய்யும் சேவை நிறுவனங்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது. ஊழியர் பற்றாக்குறையால் கரோனாவால் இறந்தவர்களின் சடலங்களை அப்புறப்படுத்துவதிலும், சடலங்களை தகனம் செய்வதிலும் சீன அரசு திணறி வருகிறது.
இந்நிலையில் கரோனாவால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அகற்றுவதில் கடைபிடிக்கப்பட்டு வரும் கொள்கைகளில் மாற்றம் செய்ய அரசு முடிவு செய்தது. இதுகுறித்து மியூன் ஃபியூனரல் ஹோம் எனப்படும் இறுதிச் சடங்கு சேவை நிறுவன ஊழியர் கூறும்போது, “சடலங்களை எடுத்துச் செல்ல எங்களிடம் சில கார்கள் மட்டுமே உள்ளன. மேலும் ஊழியர்கள் பற்றாக்குறையும் உள்ளது. பல ஊழியர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளனர். அதனால் சடலங்களை அகற்றுவதில் சிரமம் உள்ளது” என்றார்.
ஹுவாய்ரூ ஃபியூனரல் ஹோம் நிறுவன ஊழியர் கூறும்போது, “கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவரின் உடல் இங்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் அந்த சடலத்தை அப்புறப்படுத்த முடியாமல் 3 நாட்களாக இங்கேயே வைத்துள்ளோம். கடந்த சில நாட்களாக உயிரிழப்புகளும் அதிகமாக உள்ளது. மேலும் ஊழியர் பற்றாக்குறை, ஊழியர்களுக்கு கரோனா தொற்று போன்ற பிரச்சினைகள் உள்ளன” என்றார்.
இந்நிலையில், சீன செய்தி நிறுவனம் கைக்ஸின் வெளியிட்டுள்ள தகவல்களில் கடந்த வாரம் கரோனாவால் 2 பத்திரிகையாளர்களும், 23 வயது மருத்துவக் கல்லூரி மாணவரும் இறந்ததாக தெரியவந்துள்ளது.
ஆனால் சீன தேசிய சுகாதார ஆணையம், இதுவரை சீனாவில் கரோனாவால் 5,235 பேர் மட்டுமே இறந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
10 லட்சம் பேர்…: அதேநேரத்தில் கரோனா கட்டுப்பாடுகளை சீனா தளர்த் தியுள்ளதால் 2023-ல் 10 லட்சத்துக்கும் மேல் சீனாவில் உயிரிழப்பு ஏற்படும் என்று அமெரிக்காவைச் சேர்ந்த இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் மெட்ரிக்ஸ் அன்ட் எவால்யூஷன் (ஐஎச்எம்இ) தெரிவித்துள்ளது.

