முன்பள்ளிகளின் மேம்பாட்டுக்காக செயலாற்றும் சிறுவர் கல்வி மேம்பாட்டு அமைப்பு

174 0

 நிலைத்து நீடிக்கத்தக்க சமுதாயத்தை கட்டியெழுப்புவதற்கு கல்வி முக்கியமாகும். அதன் வெளிப்பாடாக உருவாக்கப்பட்ட அமைப்பாக சிறுவர் கல்வி மேம்பாட்டு அமைப்பு காணப்படுகின்றது. இந்த அமைப்பின் தலைவராக ஆறுமுகம் சத்தியமூர்த்தி செயற்பட்டுவருகின்றார். இவர் தமது அமைப்பு தொடர்பாகவும் அதன் செயற்பாடுகள் தொடர்பாகவும் கருத்துத் தெரிவிக்கையில்…

கொவிட்- 19 காலத்தில் உலகமே திகைத்துக் போயிருந்தபோது எமது மக்களுக்கு எத்தகைய உதவிகள் செய்யலாம் என அறிமுகமான நண்பர்களை இணைத்து குறிப்பாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு எவ்வாறு உதவலாம் என்பது தொடர்பில் நாங்கள் கலந்துரையாடினோம். அவ்வாறான கலந்துரையாடலின் மூலம் கல்வியே தனி நபருக்கும் சமுதாயத்திற்கும் உதவியாக இருக்கும் அதிலும் முன்பள்ளிதான் எமக்கு சரியானதாக தென்பட்டது.

தரம் ஒன்று முதல் பல்கலைக்கழகம் வரை ஏதோ ஒரு வகையில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு அரசாங்கம் உதவி செய்து வருகின்றது. ஆனால் முன்பள்ளிகளுக்கு எத்தகைய உதவிகளும் இல்லை. முன்பள்ளிகளை கண்டுக்கொள்வதில்லை. இவ்வாறான நிலையில்தான் நாங்கள் முன்பள்ளிகளுக்கு உதவி செய்ய வேண்டும் என தோன்றியது.

மனித வாழ்க்கையில் சிறுபிள்ளைப் பராயம் மிக அவசியமான ஒன்று. இந்தப் பராயத்தை நாம் முறையாக கையாள வேண்டும்.

எதிர்கால சமுதாயத்தை வளமுள்ளவர்களாக மாற்றமுடியும் என்ற நம்பிக்கையில் நாங்கள் முன் பள்ளிகளை தெரிவு செய்தோம்.

நகர்பகுதிகளைப் பார்த்தால் முன்பள்ளிகளை ஏதாவதொரு அமைப்பு பொறுப்பெடுத்து அதனை முன்னெடுக்கின்றனர். கிராமத்தைப் பொறுத்தவரையில் அங்குள்ள மக்கள் பொருளாதாரம், கல்வி, அடிப்படைத் தேவைகள் இல்லாத நிலையில் இருக்கின்றனர்.

மலையகத்தைப் பொறுத்தவரையில் முன்பள்ளி ஆரம்பிப்பதற்கான அடிப்படை  வசதிகள் கூட இல்லாத நிலையே காணப்படுகின்றது. தோட்டத்தொழிலாளர்கள் தமது பிள்ளைகளை சிறுவர் பராமரிப்பு இல்லத்திலேயே விட்டுச் செல்கின்றார்கள். அது சிறுவர்களுக்கான கல்வி கற்கும் இடமாக இல்லை. அதுவும் சிறுவர்களை பராமரிப்பவர்கள் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளார்கள். தாய்மொழி இல்லை. அங்கு முன்பள்ளி ஒன்றை ஆரம்பிப்பதானால் தோட்டத்துறை முதலாளிகளிடமே கேட்கவேண்டும். எல்லோரும் சம்மதிக்கமாட்டார்கள். ஆனால் தோட்டத்தொழிலாளர்களிடம் விழிப்புணர்வு காணப்படுவதை நாங்கள் அறிந்து கொண்டோம். இவ்வாறான காரணங்களினால்தான் இலங்கையின் முதுகெலும்பாகவுள்ள மலையகத்தையும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கையும் நாங்கள் தெரிவு செய்தோம். அடுத்த கட்டமாக ஏனைய மாகாணங்களையும் இணைத்துக் கொள்வதற்கு கருத்துப் பரிமாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றோம்.

எமது முன்பள்ளித் தெரிவுகளாக ஏற்கனவே ஆரம்பித்து இயங்கமுடியாதவை, முன்பள்ளிகளை உருவாக்குவதற்கு சிரமப்படுகின்ற, முன்பள்ளி தேவை என உணர்ந்த கிராமங்களை நாங்கள் அடையாளப்படுத்தினோம். இவற்றில் 39 முன்பள்ளிகளை தெரிவு செய்துள்ளோம் அம்பாறை  – 2, மட்டக்களப்பு 11, திருகோணமலை 14, மலையகத்தில் 2, வவுனியாவில் 05, முல்லைத்தீவு 04, மன்னார் 1 ஆகியவற்றைத் தெரிவு செய்து எமது செயற்றிட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம்.

குறித்த முன்பள்ளிகளுக்கு மாதாந்த வேதனம் வழங்கி வருவதுடன் போக்குவரத்துக்கான கொடுப்பனவுகளையும் வழங்குகின்றோம். இது மட்டுமன்றி மாணவர்கள் பூரண திருப்தியுடன் கற்கவேண்டும் என்பதற்காக சத்துணவுகளை வழங்கிவருவதுடன் ஆசிரியர், மாணவர்களுக்கு சீருடைகளையும் வழங்கியுள்ளோம். முன்பள்ளிகளின் அடிப்படைத் தேவைகளையும் குறிப்பாக நீர், தளபாடம், மின்சாரம் தேவைகளுக்கு ஏற்ப வழங்கிவருவதுடன் கட்டடத் தேவைகளையும் நிறைவேற்றி வருகின்றோம்.

பெற்றோர் ஆசிரியர்களின் உறவை வளர்ப்பதற்காக மாதாந்த ஒன்று கூடல்களையும் சமூக மட்ட அமைப்புக்களை இணைத்து ஒன்றுகூடலையும்  மேற்கொண்டு வருகின்றோம்.

எமது மேற்பார்வையின் கீழ் உள்ள முன்பள்ளிகள் ஒவ்வொரு வாரமும் எத்தகைய விடயங்களை மேற்கொண்டுள்ளார்கள் என்பது தொடர்பிலும் செலவீனங்கள் தொடர்பிலும் குறிப்பேடுகள் தயாரிக்கப்படவேண்டும்.

இந்த அமைப்பில் மாவட்ட ரீதியாக கண்காணிப்பாளர்கள், செயற்பாட்டாளர்கள் கொண்ட குழுவினரையும் மற்றும் நிர்வாக சபை, நிறைவேற்று சபை போன்ற கட்டமைப்புகளும் உள்ளன. நிர்வாக சபையில் ஆறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பிரதிநிதிகளாக இருப்பார்கள் .அவர்கள் அந்தந்த நாட்டில் நிதி திரட்டக்கூடிய செயற்பாடுகளை முன்னொடுப்பார்கள். ஒவ்வொரு நாடுகளிலும்முறைப்படியான அங்கீகாரத்தைப் பெற்றே செயலாற்றி வருகின்றோம்.

குறிப்பாக ஐக்கிய அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், நோர்வே, அவுஸ்திரேலியா, இலங்கை ஆகிய நாடுகளைச் சேரந்தவர்கள் அங்கம் வகிக்கின்றார்கள்

இவ் அமைப்பானது இன, மத வேறுபாடுகளைக் கடந்து செயற்பட்டு வருவதுடன் அனைத்து மாவட்டங்களிலும் பின்தங்கிய நிலையிலுள்ள முன்பள்ளி மாணவர்களை இணைத்துச் செயற்படுவதே எமது அடுத்த கட்ட இலக்காகவுள்ளது. எங்கள் அமைப்புடன் அனுசரணையாளர்கள் இணைந்துகொள்ள முடியும்,

இவ் அமைப்பின் மலையகத்தின் பிரதிநிதியாக செயற்பட்டு வரும் பாலையா பாலசுப்பிரமணியம் கருத்துத் தெரிவிக்கையில்,

மலையகத்தைப் பொறுத்தவரையில் நகர்ப்புறங்கள் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் முன்பள்ளிகள் செயற்பட்டு வருகின்றன. ஆனால் தோட்டங்களில் முன்பள்ளி என்பது இல்லை, சிறுவர் பராமரிப்பு நிலையங்களே காணப்படுகின்றன. தரம் ஒன்று ஆரம்பிக்கும்போதுதான் அவர்கள் கல்விக்காக இணைத்துக் கொள்ளப்படுவார்கள். இவ்வாறான நிலை  மாற்றி அமைக்கப்படல் வேண்டும் என்பதற்காகத்தான் சிறுவர் கல்வி மேம்பாட்டு அமைப்பு இயங்கி வருகின்றது. இத்தகையவர்களுக்கு மலையகத்தில் உள்ள கல்விச் சமூகம், அரசியல் பிரதிநிதிகள் ஒத்துழைப்பு வழங்கி மாணவர்களின் எதிர்காலத்தை வளப்படுத்தவேண்டும் என்றார்.

இவ் அமைப்பின் நேர்வே செயற்பாட்டாளராக செயற்பட்டு வரும் மகா சிற்றம்பலம் தெரிவிக்கையில்,

முன்பள்ளிகளில்  ஆசிரியைகளே உள்ளார்கள். அதுபோல முன்பள்ளிகளின் பெற்றோர் சந்திப்பின்போதும் தாய்மார்களே கலந்துகொள்கின்றனர்.   குறிப்பாக பெண் தலைமைத்துவத்தில் உள்ளவர்களே இத்தகைய சந்திப்புக்களில் கலந்துகொள்கின்றார்கள். அவ்வாறான பெண்களை சமுதாயத்தில் முன்னிலைப்படுத்தவேண்டும் என்பதே எனது எண்ணமாக இருப்பதால் இந்த அமைப்புடன் சேர்ந்து அவர்களுக்கு எவ்வாறான உதவிகளைச் செய்யமுடியுமோ அத்தகைய உதவிகளை அவர்களுக்கு செய்து வருகின்றேன்.

குடும்பத்தில் ஒரு தாய் முன்னிலைக்கு வருவாராக என்றால் ஒரு சமுதாயத்தை சிறப்பாக நல்வழிப்படுத்தலாம் என்பது எனது நம்பிக்கை அத்தகைய நம்பிக்கையை வளப்படுத்துவதே எனது நோக்கமாகக்கொண்டு செயற்படுகின்றேன் என்றார்.

எம்.நியூட்டன்