எத்தரப்பினருடனும் கூட்டணி அமைக்கத் தயார்

370 0

அரசியல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்புக்காகவும், நாட்டின் எதிர்காலத்திற்காகவும் எத்தரப்பினருடனும் கூட்டணி அமைக்க தயார்.

நாட்டின் நலனுக்காக அரசியல் கட்சி கொள்கைகளை மாற்றியமைப்பதில் தவறேதும் கிடையாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில்  திங்கட்கிழமை (டிச. 12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

கட்சி என்ற ரீதியில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்துள்ளோம். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் கொள்ளை ரீதியில் வேறுபாடு உள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.

அரசியல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்புக்காகவும், நாட்டின் எதிர்காலத்திற்காகவும் எத்தரப்பினருடனும் ஒன்றிணைய தயார்.

ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கைக்கும்,எமது அரசியல் கொள்கைக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் கூட்டணியமைக்கப்பட்டால் நிச்சம் ஒன்றிணைவோம்.

நாட்டின் நலனுக்காக அரசியல் கட்சி கொள்கையில் மாற்றம் ஏற்படுத்துவதில் தவறேதும் கிடையாது. சிறந்த நோக்கங்களை அடிப்படையாகக் கொண்ட தீர்மானங்களுக்கு ஒருபோதும் பின்வாங்க போவதில்லை. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசியல் ரீதியில் விட்டுக் கொடுப்புடன் செயற்படுகிறது.

விமர்சனங்களை மாத்திரம் முன்வைக்கும் எதிர்தரப்பினர் சவால்களை ஏற்றுக் கொள்வதற்கு தைரியமில்லாதவர்கள். வெறும் குற்றச்சாட்டுக்களை முன் வைத்துக் கொண்டிருந்தால் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது.

நாட்டின் நலனை முன்னிலைப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் ஒன்றிணைந்துள்ளோம் என்றார்.