நாமல் ராஜபக்ச விடுத்துள்ள சவால்!

213 0

ராஜபக்சவை பழிவாங்கும் நோக்கில் நாட்டை அழிக்காமல் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிட்டு தன்னை தோற்கடிக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அரகலய செயற்பாட்டாளர்களுக்கு சவால் விடுத்துள்ளார். எந்தவொரு கட்சியும் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு மக்களின் ஆசியுடன் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்று தெரிவித்துள்ள நாமல் ராஜப்கச, கடந்த 30 வருடங்களில் புலிகள் நாட்டுக்கு செய்ததை அரகலய செயற்பாட்டாளர்கள் இப்போது செய்து வருகின்றனர் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார். கொவிட்-19 பொருளாதார பாதிப்பில் இருந்து நாடு மீள முயற்சித்து வருகிறது.

இவ்வாறான தருணத்தில் அரகலய செயற்பாட்டாளர்கள் நாட்டை மேலும் சீரழித்து அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிக்கின்றனர். அப்படி ஒரு விடயத்திற்கு அனுமதிக்க மாட்டோம். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகிய பின்னரும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஜனாதிபதியாக இருப்பதற்கு நியாயமான மக்கள் சக்தி இல்லை என அரகலய செயற்பாட்டாளர்கள் கோஷம் எழுப்புகின்றனர்.

அரசியலமைப்பைப் பற்றி எந்த அறிவும் இல்லாமல் அவர்கள் அவ்வாறு கூறுவதை இது காட்டுகிறது. ராஜபக்ஷக்கள் இந்த நாட்டையும் மக்களையும் நேசிக்கிறார், எந்த சக்தியாலும் இதை மாற்ற முடியாது. ராஜபக்சவை பழிவாங்க நினைப்பவர்கள் நாட்டை அழிக்காமல் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிட்டு முடிந்தால் என்னை தோற்கடிக்கட்டும் என்றும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.