சர்வதேசம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றதை அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும் – காவிந்த

183 0

உள்ளூராட்சி மன்ற சபைத் தேர்தலை பிற்போட்டால் அரசாங்கம் சர்வதேச மட்டத்தில் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும்.

இலங்கையில் அரசியல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு அவசியம் என சர்வதேசம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றதை அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.

நீர்கொழும்பு பகுதியில் சனிக்கிழமை (10) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை விடுத்து அரசாங்கம் மக்களை மென்மேலும் நெருக்கடிக்குள்ளாக்குகிறது.

வரி அதிகரிப்பை தவிர்த்து மாற்றுத் திட்டம் ஏதும் கிடையாது என குறிப்பிட்டுக் கொண்டு அமைச்சரவை அமைச்சுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அவதானம் செலுத்தியுள்ளது.

மேலதிகமாக அமைச்சுக்களை நியமிப்பதை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.நாட்டில் 99 இலட்ச மக்கள் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்,இவர்கள் அரசாங்கத்திடமிருந்து நலன்புரி நிவாரணங்களை எதிர்பார்த்துள்ளார்கள்.

பொருளாதாரத்தை வேண்டுமென்றே நெருக்கடிக்குள்ளாக்கி முழு நாட்டு மக்களையும் நெருக்கடிக்குள்ளாக்கியவர்களுக்கு அரசாங்கம் முழுமையான பாதுகாப்பு வழங்கியுள்ளது.

நிதி நிலைமையின் உண்மை நிலைவரத்தை மறைத்து அரசாங்கத்திற்கு சார்பாக செயற்பட்ட மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தற்போது பொருளாதார பாதிப்பு தொடர்பில் புத்தகம் எழுதுவது வேடிக்கையாகவும்,நகைப்புக்குரியதாகவும் உள்ளது.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டுமாயின் அதற்கு நாட்டு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்திற்கு மக்களாணை கிடையாது.நாட்டு மக்கள் தேர்தலை கோருகிறார்கள்.

நகர மற்றும் பிரதேச சபை சட்டத்தின் பிரகாரம் உள்ளூராட்சி மன்ற சபைத் தேர்தல் எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20 திகதி;க்கு முன்னர் நடத்தப்பட வேண்டும்.ஆனால் உள்ளூராட்சி மன்ற சபைத் தேர்தலை பிற்போட அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

உள்ளூராட்சி மன்ற சபைத் தேர்தலை பிற்போட்டால் அரசாங்கம் சர்வதேச மட்டத்தில் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும்.

இலங்கையில் அரசியல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு அவசியம் என சர்வதேசம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றதை அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும்.நாட்டு மக்கள் தமக்கான அரசாங்கத்தை தெரிவு கொள்ள இடமளிக்க வேண்டும்,ஆகவே நிச்சயம் எதிர்வரும் ஆண்டு உள்ளுராட்சி மன்ற சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றார்.