தேர்தலை வெற்றிகொள்ள பஷில் தலைமையில் நடவடிக்கை – சாகர

217 0

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுன தனித்தே போட்டியிடும். எக்காரணிகளுக்காகவும் கட்சியின் தனித்துவத்தை விட்டுக் கொடுக்க முடியாது.

தேர்தலை வெற்றிக் கொள்வதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கை பஷில் ராஜபக்ஷ தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மாதம் முதல் நாடளாவிய ரீதியில் கட்சி கூட்டங்களை நடத்துவோம் என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தேர்தலை பிற்போட வேண்டிய தேவை பொதுஜன பெரமுனவிற்கு கிடையாது. வெற்றியோ,தோல்வியோ உரிய காலத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளோம்.

தேர்தலை நடத்துவதற்கான சூழல் காணப்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பிறிதொரு அரசியல் கட்சியுடன் கூட்டணி அமைத்து,பொது சின்னத்தில் போட்டியிடுவதாக வெளியாகியுள்ள செய்திகள் அடிப்படையற்றதாகும்.வெற்றியோ,தோல்வியோ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனித்து மொட்டு சின்னத்தில் போட்டியிடும்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஆரம்ப கட்ட நடவடிக்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நாட்களில் பொதுஜன பெரமுன கூட்டணியில் உள்ள பங்காளிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காக கொண்டு எதிர்வரும் மாதம் முதல் நாடளாவிய ரீதியில் கட்சி கூட்டங்களை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.பெரும்பாலான மக்கள் பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு வழங்குவார்கள் என்றார்.