கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனாநாயக்கவின் அழைப்பின் பேரில் யாழ் மாநகர சபை, வலிகாமம் தெற்கு மற்றும் வலிகாமம் தென்மேற்கு ஆகிய பிரதேசசபைகளின் உறுப்பினர்கள் நல்லிணக்க அடிப்படையில் கொழும்பிற்கு விஜயம் செய்துள்ளனர்.
நல்லிணக்க அடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த 3 நாட்கள் விஜயத்தில் கொழும்பில் கேந்திர முக்கியத்துவமுடைய இடங்களுக்கு உறுப்பினர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

கொழும்பிற்கு வருகை தந்துள்ள இவர்கள் துறைமுக நகரம், பாராளுமன்றம் மற்றும் பொது நூலகம் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கும் விஜயம் செய்தனர். இவ்விஜயத்தின் ஒரு அங்கமாக சனிக்கிழமை (10) கொழும்பு 8, வெஸ்லி மைதானத்தில் நட்புரீதியான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியொன்றும் இடம்பெற்றது.
இந்த விஜயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட யாழ் மாநகர மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணன்,
‘கொழும்பு மாநகர சபையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்திலிருந்து யாழ் மாநகரசபை, மானிப்பாய் பிரதேசசபை, உடுவில் பிரதேசசபை என்பவற்றை சேர்ந்த உறுப்பினர்கள் இந்த விஜயத்தில் கலந்து கொண்டுள்ளனர். இவ்விஜயத்தினை ஏற்பாடு செய்தமைக்கு கொழும்பு மாநகரசபைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்.
கொழும்பு மாநகரசபையின் அனுபவத்தைப் பெற்றுக் கொள்வதற்கு மிகச்சிறந்தவொரு களமாக இது அமைந்துள்ளது. எதிர்வரும் காலங்களில் யாழ் மற்றும் கொழும்பு மாநகரசபைகளை இணைத்து செயற்படுத்துவற்கான முன்மொழிவுகள் தொடர்பில் இதன் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய இரு மாநகரசபைகளுக்குமிடையில் இரட்டை நகர் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கையெழுத்திடுவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.’ என்றார்.
யாழ் மாநகரசபையின் பிரதி மேயர் துறைராஜா ஈசன் தெரிவிக்கையில் ,
‘வடக்கில் காணப்பட்ட யுத்தம் வடக்கு மற்றும் தெற்கிற்கிடையிலான உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தியிருந்தது. இவ்வாறான நிலையில் கொழும்பு மேயரால் இந்த விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டமையானது விரிசல் ஏற்பட்டுள்ள உறவை புதுப்பிப்பதாகவும் , நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாகவும் அமையும்.’ என்றார்.
வலி தெற்கு பிரதேசசபை தவிசாளர் கருணாகரன் தர்ஷன் தெரிவிக்கையில் ,

மேயர் ரோசி சேனாநாயக்க வடக்கிற்கு விஜயம் செய்திருந்த போது விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய , எமது பிரதேசசபைகளுக்கு தேவையான வாகனங்கள் சில கையளிக்கப்பட்டன. வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையில் அரசியல் மற்றும் நிர்வாக ரீதியில் காணப்படும் இடைவெளியை குறைக்கும் வகையில் அமைந்துள்ள இந்த விஜயத்தினை ஏற்பாடு செய்தமைக்கு மேயருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்.
யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கான பயிற்சிகள் , ஜனாதிபதியுடனான சந்திப்பு உள்ளிட்டவற்றை செய்து கொடுப்பதாக மேயர் எம்மிடம் உறுதியளித்துள்ளார். மாநகரசபைக்கு அப்பால் ஜனாதிபதியால் தீர்க்கக் கூடிய விடயங்கள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்த முடியும் என்று எதிர்பார்க்கின்றோம். இரு மாநகரசபைகளுக்குமிடையில் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் சேவைகளைப் பெற்றுக் கொள்வதும் இலகுவானதாகும் அமையும். நாம் தொடர்ச்சியாக சமஷ்டி முறைமையே வலியுறுத்திக் கொண்டிருக்கின்றோம். அரசியல்வாதிகள் சிலர் இதற்கு இடமளிப்பதில்லை என்பதையும் நாம் மேயருடனான சந்திப்பில் வலியுறுத்தினோம்’ என்றார்.
மானிப்பாய் பிரதேசசபை தவிசாளர் அந்தோணிப்பிள்ளை ஜெபநேசன் தெரிவிக்கையில்,

‘உறுப்பினர்களுக்கிடையிலான நட்புறவை வளர்த்துக் கொள்ளும் வகையில் இந்த விஜயம் அமைந்துள்ளது. பொருளாதார ரீதியில் எமக்கு ஒத்துழைப்புக்களை வழங்கும் வகையில் கொழும்பு மாநகரசபையினால் வாகனங்கள் வழங்கப்பட்டன.’ என்றார்.

