வவுனியாவில் ஆர்ப்பாட்டம் : வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலைமை குறித்து கேள்வி ?

188 0

வுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் பாரிய ஆர்ப்பாட்ட பேரணியொன்று இன்று சனிக்கிழமை (டிச. 10) காலை 10.30 மணியளவில் வவுனியா கந்தசுவாமி ஆலய முன்றலில் இடம்பெற்றுள்ளது.

இப்போராட்டமானது பஜார் வீதியூடாக ஹோரவப்போத்தானை வீதி வழியே சென்று, ஏ9 வீதியூடாக வவுனியா பழைய பேருந்து நிலையத்தினை வந்தடைந்தது.

இப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் ‘மனித உரிமை மீறப்பட்ட நாட்டில் மனித உரிமை தினம் எதற்கு?’, ‘மனித உரிமை தினம் எமக்கு எதிர்ப்பு தினம்’, ‘மனித உரிமை மதிக்கப்படாத நாட்டில் மனித உரிமை நிறுவனம் எதற்கு’, ‘தமிழர்களின் உரிமைகளை மறுக்காதே மறுக்காதே’, ‘கடத்தி காணாமல் ஆக்கப்பட்டவர் எங்கே எங்கே’ போன்ற பல்வேறு கோசங்களை எழுப்பியவாறும், யுத்தகால மனித உரிமை மீறல்கள் சார்ந்த புகைப்படங்கள், கறுப்புக்கொடி, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் புகைப்படங்களை ஏந்தியவாறும் காணப்பட்டனர்.

வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலிருந்து நூற்றுக்கு மேற்பட்டவர்கள் வருகை தந்து இந்த போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.