அம்பாறையில் கடல் கொந்தளிப்பு

145 0

ங்காள விரிகுடா கடலில் ஏற்பட்டுள்ள திடீர் காலநிலை மாற்றங்கள் காரணமாக அம்பாறை மாவட்ட கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் செல்வதில் பாரிய சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்நிலையில் பெரிய நீலாவணை, சாய்ந்தமருது, மருதமுனை, பாண்டிருப்பு, அட்டாளைச்சேனை,  நிந்தவூர், ஒலுவில் போன்ற பிரதேசங்களில் காற்றின் வேக அதிகரிப்பு, காற்றின் திசை மாற்றம், நீரோட்டத்தில் ஏற்பட்டுள்ள திசை மாற்றம், கடல் நீரின் தன்மை வழமைக்கு மாறாக குளிர்ச்சியாக காணப்படுகின்ற காரணங்களால் கடல் அலைகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படுகிறது. இதனால் கடற்றொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, காலநிலை மாற்றங்கள் காரணமாக கடலரிப்பு அதிகமாக ஏற்படுவதனாலும், கரையோர மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள் பாரிய  கடலரிப்புக்கு உள்ளாகி வருகின்றது.

இதேவேளை மருதமுனை கடற்கரை பகுதியில் உள்ள சுமார் 100 மீற்றருக்கு அதிகமான நிலப்பரப்பு கடலால் காவுகொள்ளப்பட்டுள்ளதுடன், ஏராளமான தென்னை மரங்கள் சரிந்து விழுந்து, பெருமளவு சேதங்களை ஏற்படுத்தியுள்ளன.

இத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தும்  கடலரிப்பை தடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை கடலரிப்பினால் கல்முனை கடற்கரை பகுதிகளில் போக்குவரத்து மேற்கொள்வதிலும் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

கடந்த சுனாமி பேரலை தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட இப்பிரதேச மக்கள் தற்போதைய காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள கடல் கொந்தளிப்பினால் மேலும் அச்சமடைந்துள்ளனர்.

மேலும், அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களில் தீவிரமடைந்துவரும் கடலரிப்பினால் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை மக்கள் இழந்து வருவதோடு,  அங்குள்ள மீனவர்கள் தொழில் செய்வதில் பேரிடர்களை எதிர்கொண்டு வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.