பட்ஜெட்டின் இறுதி வாக்கெடுப்பு இன்று

94 0

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் சமர்ப்பித்துள்ள 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் இன்று (08) நடைபெற உள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிக்குக் கிடைத்த மற்றொரு வாய்ப்பிலும் எதிர்க்கட்சிக்கு தோல்வியே கிடைக்க உள்ளது.

நிலையான மற்றும் நீண்ட கால பொருளாதார அபிவிருத்திக்காக தயாரிக்கப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான  வரவு – செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த மாதம் 14ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.

இவ்வாறான நிலையில், வரவு செலவு திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று (08) மாலை நடைபெற உள்ளது. பாராளுமன்றத்துக்கு அருகில் தொழிற்சங்கங்களும் பல்வேறு போராட்டங்களை நடத்துவதற்கு இன்று திட்டமிட்டுள்ளதால் பலத்தப் பாதுகாப்புக்கு மத்தியிலேயே பாராளுமன்றத்தில் வரவு செலவு திட்டத்துக்கான வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

வரவு செலவு திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு கடந்த 22ஆம் திகதி நடைபெற்ற நிலையில் வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவாக 121 வாக்குகளும் எதிராக 84 வாக்குகளும் செலுத்தப்பட்டு 37 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

இதன்பின்னர் குழுநிலை விவாதம் ஆரம்பமாகி இன்று இறுதி வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துக்கு வெற்றியே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரவு செலவு திட்டத்தை தோற்கடித்து ஆட்சியைக் கவிழ்க்க எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தாலும் அந்த முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதாக அறிய முடிகிறது.