சட்டவிரோத சிறுநீரக வர்த்தகம் : கொழும்பு மோசடி தடுப்புப் பிரிவின் பிரதான பொலிஸ் பரிசோதகர் தொடர்பில் விசாரணை

77 0

கொழும்பு – பொரளை, கொட்டா வீதியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றினை மையப்படுத்தி இடம்பெற்றதாக கூறப்படும் சட்டவிரோத சிறுநீரக வர்த்தகம் குறித்த விசாரணைகளில் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவர் குறித்து தீவிர அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் முன்னெடுக்கும் விசாரணைகளில் தற்போது கொழும்பு மோசடி தடுப்புப் பிரிவில் கடமையாற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதால், இந்த விசாரணைகள் தீவிரப்படுத்தப்ப்ட்டுள்ளன.

செவ்வாய்க்கிழமை (டிச. 06) இந்த விவகார வழக்கு விசாரணைக்கு வந்தபோது விசாரணையாளர்கள் சார்பில் மன்றில் ஆஜரான சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் பொலிஸாரின் தொடர்பு குறித்து மன்றின் கவனத்துக்கு கொண்டு வந்திருந்தார்.

‘சிறுநீரகங்களை தானம் செய்தவர்கள் பொரளை பிரதேசத்தில் உள்ள குறித்த தனியார் வைத்தியசாலைக்கு சென்று உறுதியளிக்கப்பட்ட பணம் கிடைக்காத காரணத்தினால் அதனை கோரி ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.

அப்போது, அவர்களை  அங்கு சென்று  சந்தித்துள்ள பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவர்  தலா இரண்டு லட்சம் ரூபா கொடுத்துள்ளதுடன், ‘இனி தொந்தரவு செய்யக் கூடாது.  மீறி அப்படி செய்தால்  எலும்புகளை உடைத்துவிடுவேன்.’ என மிரட்டியுள்ளார்.

இது மிகவும் ஆபத்தான நிலை, இந்த கடத்தல் சம்பவத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் எப்படி தலையிட்டார்?, இந்த கடத்தலின் பின்னணியில் பொலிஸ்  அதிகாரிகள் இருக்கிறார்களா என்பது குறித்து மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.’ என திலீப பீரிஸ் குறிப்பிட்டிருந்தார்.

இந் நிலையிலேயே குறித்த பிரதான பொலிஸ் அதிகாரி மோசடி தடுப்புப் பிரிவில் தற்போது சேவையாற்றுவதும், சிறுநீரக மோசடி விவகாரம் குறித்த விசாரணை ஆரம்பிக்கப்பட்ட போது  சேவைக்கு சமூகமளிக்காமல் இருந்துள்ளதுடன், தற்போது வழமை போன்று சேவைக்கு வருவதாகவும் பொலிஸ்  தகவல்கள் தெரிவித்தன.

குறித்த பொலிஸ் அதிகாரி இதற்கு முன்னர் பியகம விலேஜ் உரிமையாளர் கொலை சம்பவத்தின் போது உண்மை குற்றவாளிகளை கைது செய்யாமையை மையப்படுத்தி பணி  இடை நீக்கம் செய்யப்பட்டிருந்தவர் எனவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும் அவருக்கு பொலிஸ் உயரதிகாரிகள் பலரின் உதவி இருப்பதால் அவர் தொடர்ச்சியாக பொலிஸ் திணைக்ளத்தில் சேவையாற்றுவதாக கூறப்படுகின்றது.