அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தலை எதிர்பார்க்க முடியும்

72 0

2023இல் ஜனாதிபதி தேர்தல் ஒன்றை எமக்கு எதிர்பார்க்க முடியும்.  நாட்டின் தற்போதைய நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கு செல்வதே பொருத்தமாகும் அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதமாகும்போது ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான சிறந்த காலமாகும்.

இது தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடி இருக்கின்றோம் என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் புதன்கிழமை (டிச.07) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

2023ஆம் ஆண்டு நடுப்பகுதியில் தேர்தல் ஒன்றுக்கு செல்லவேண்டி ஏற்படுகின்றது. தேர்தல்கள் அனைத்தையும் ஒரே நேரத்தில் நடத்தினால் செலவுகளை குறைத்துக்கொள்ளலாம்.

அதாவது, ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்ற  தேர்தல் மற்றும் உள்ளூராட்சி மற்றும் மாகாணசபை தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்து முடியுமாக இருந்தால் நல்லது. இதன் மூலம் வீண் விரயங்களையும் குறைத்துக்கொள்ளலாம்.

அத்துடன் எந்த தேர்தலுக்கும் முகம்காெடுக்க ஐக்கிய தேசிய கட்சி தயார் நிலையிலேயே இருக்கின்றது. உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு வேட்பாளர்களை தெரிவு செய்யும் பொருட்டு, தொகுதி அமைப்பாளர்களை தெரிவுசெய்யும் நேர்முகப்பரீட்சை தற்போது இடம்பெற்று வருகின்றது. அதிகமான இளைஞர்கள் இதில் கலந்துகொண்டிருக்கின்றனர்.

தேர்தலை உரிய காலத்தில் நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே  ஐக்கிய தேசிய கட்சி எப்போதும் இருந்து வருகின்றது. எப்படி இருந்தாலும் 2023இல் ஜனாதிபதி தேர்தல் ஒன்றை எமக்கு எதிர்பார்க்க முடியும். அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதமாகும்போது ஜனாதிபதி தேர்தலுக்கு செல்லவேண்டும் என்றே நினைக்கின்றேன்.

அதன் மூலம் நாட்டின் தலைவராக யாரை தெரிவு செய்துகொள்வது என்பதை மக்களுக்கு தீர்மானித்துக்கொள்ளலாம். மக்கள் தேர்தல் ஒன்றை கோருவதாகவே எதிர்க்கட்சி தெரிவித்து வருகின்றது.

அதனால் அடுத்த வருடம் தேர்தலுக்கு நாங்கள் செல்வோம். ஆனால் நாட்டில் இடம்பெறும் பிரதான தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்துமாறே நான் ஜனாதிபதிக்கு தெரிவித்தேன்.

என்றாலும் ஜனாதிபதி தேர்தலுக்கு செல்வதே தற்போதுள்ள நிலைமையில் சிறந்த தீமானம் என்றே நினைக்கின்றேன். ஏனெனில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி பதவி விலகினார். அதனால் மீண்டும் ஜனாதிபதி ஒருவரை தெரிவுசெய்துகொள்ள மக்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கின்றது.

எனவே ஜனாதிபதி தேர்தல் ஒன்றுக்கு செல்வதே சிறந்தது. அடுத்த வருடம் நடுப்பகுதி அதற்கான சிறந்த காலமாகும் என்றார்.