தொண்டர்களின் ஆதரவு 100 சதவீதம் எங்களுக்குத்தான்: ஓ.பன்னீர்செல்வம்

240 0

எங்களுக்குத்தான் அ.தி.மு.க. தொண்டர்களின் ஆதரவு நூற்றுக்கு நூறு சதவீதம் இருக்கிறது என்று முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதிப்பட தெரிவித்தார்.

எம்.எல்.ஏ.க்கள் வேண்டுமானால் அவர்களிடம் இருக்கலாம். ஆனால் எங்களுக்குத்தான் அ.தி.மு.க. தொண்டர்களின் ஆதரவு நூற்றுக்கு நூறு சதவீதம் இருக்கிறது என்று முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதிப்பட தெரிவித்தார்.

முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க.வின் புதிய அணிக்கு தலைமை ஏற்று இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- ஜெயலலிதா பிறந்தநாளான வருகிற 24-ந் தேதி அன்று நீங்களும், ஜெ.தீபாவும் முதல் கூட்டத்தில் ஒரே மேடையில் பேச இருக்கிறீர்கள். இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:- அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கேள்வி:- உங்களுக்கு 11 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள். மேலும் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளிக்க முன்வருவார்களா?

பதில்:- மேலும் எம்.எல்.ஏ.க்கள் எனக்கு ஆதரவு அளிக்க நிச்சயமாக முன்வருவார்கள்.

கேள்வி:- உண்மையான அ.தி.மு.க. யார்?

பதில்:- உண்மையான அ.தி.மு.க.வை நிர்ணயிப்பது அ.தி.மு.க.வின் அடிப்படை தொண்டர்களும், மக்களும் தான். அவர்களிடம் (சசிகலா அணி) வேண்டுமானால் எம்.எல்.ஏ.க்கள் இருக்கலாம். ஆனால் எங்களுக்கு அ.தி.மு.க. தொண்டர்கள், மக்களின் ஆதரவு நூற்றுக்கு நூறு சதவீதம் இருக்கிறது. இதற்கெல்லாம் காலம் நிச்சயம் பதில் சொல்லும். எம்.ஜி.ஆர். மறைந்த போது ஜானகி அணி, ஜெயலலிதா அணி என்று 2 அணிகள் இருந்தது. இதில் ஜெயலலிதாவுக்கு எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இல்லை. ஆனால் தொண்டர்கள், மக்களின் ஆதரவு முழுமையாக இருந்தது. அதேபோல தான் எங்களிடமும் இப்போது எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இல்லையென்றாலும் அம்மாவின் (ஜெயலலிதா) தொண்டர்களின் முழு ஆதரவும் இருக்கிறது.

கேள்வி:- சபாநாயகர் மேல் தி.மு.க. நம்பிக்கையில்லா தீர்மானம் கொடுத்து இருக்கிறார்களே? உங்கள் தரப்பில் இருந்து அப்படி எதுவும் செய்ய வாய்ப்பு உள்ளதா?

பதில்:- இதுபற்றி என்னுடைய ஆதரவாளர்களிடம் தீவிரமாக கலந்து ஆலோசித்து முடிவுகளை எடுப்போம்.

கேள்வி:- உங்களுடைய எதிர்கால அரசியல் பயணம் எதை முன்வைத்து இருக்கும்?

பதில்:- தமிழ்நாடு முழுவதிலும் இருந்து மக்கள் எனக்கு பரிபூரண ஆதரவை செல்போனிலும், நேரிலும் வந்து தெரிவிக்கிறார்கள். ஜெயலலிதா மீது மக்கள் வைத்த நம்பிக்கையை, அவருடைய உண்மை தொண்டனாகிய என் மீது வைத்து இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும், பொறுப்பையும் கொடுத்து இருக்கிறது. அதற்கேற்றாற்போல் என்னுடைய எதிர்கால அரசியல் பயணமும், மக்கள் சேவையும் இருக்கும்.
இவ்வாறு அவர் பதில் அளித்தார்.