வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கக்கோரி இன்று சத்தியாக்கிரகப் போராட்டம்(காணொளி)

595 0

மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கக்கோரி இன்று சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

மத்திய அரசும் மாகாண அரசும் வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வ ழங்க நடவடிக்கையெடுக்க வேண்டும் எனக்கோரி மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக சத்தியாக்கிரக போராட்டம் ஒன்று இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த சத்தியாக்கிரக போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சத்தியாக்கிரக போராட்டத்திற்கு முன்பாக தமது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்று மாணவாகளால் முன்னெடுக்கப்பட்டது.

எமக்கான வேலைவாய்ப்பு கிடைக்கும் வரையில் தொடரும் எங்கள் போராட்டம், பட்டதாரிகள் தொடர்ந்து வீதியிலா உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளையும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தவர்கள் ஏந்தியிருந்தனர்.

இந்த போராட்டத்தில் கடும் வெயிலிலும் பச்சிளங்குழந்தைகளுடன் தாய்மாரும் கலந்துகொண்டதுடன் விசேட தேவையுடையவர்களும் கலந்து கொண்டனர்.

பல்வேறு காரணங்கள் தெரிவிக்கப்பட்டு தமக்கான நியமனங்கள் வழங்குவது காலத்தாழ்த்தப்படுவதாகவும், அவற்றினை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் பட்டதாரிகள் இதன்போது கோரிக்கை விடுத்தனர்.

2012ஆம் ஆண்டின் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் 4ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் Nவுலையற்ற நிலையில் உள்ளபோதிலும், எந்த ஒருதீர்வினையும் மத்திய மாகாண அரசுகள் வழங்காத நிலையில் காலவரையறையற்ற சத்தியாக்கிரக போராட்டத்திற்கு செல்லவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் ரி.கிசாந்த் தெரிவித்தார்.

இதன்போது, பட்டதாரிகளின் திறமைகளை போட்டிப்பரீட்சைகள் மூலம் அறிந்துகொள்ளமுடியாது எனவும், நேர்முகத்தேர்வின் மூலம் பட்டதாரிகள் நியமனங்கள் பயிற்சி அடிப்படையிலாவது வழங்கப்படவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ள வேலையற்ற பட்டதாரிகள், பட்டதாரிகளின் நியமனங்கள் அவர்கள் பட்டம்பெற்ற ஆண்டின் அடிப்படையில் வழங்கப்படவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.