மலேஷியாவின் முன்னாள் பிரதமர் மஹதிர் மொஹம்மத், 53 வருடங்களில் முதல் தடவையாக தேர்தலில் தோல்வியுற்றுள்ளார்.
மலேஷியாவின் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நேற்று நடைபெற்றது. இத்தேர்தலில் லாங்கவி தொகுதியில் மஹிதிர் மொஹம்மத் போட்டியிட்டார். ஐந்து முனைப் போட்டியில் 4 ஆவது இடத்தையே மஹதிர் மொஹம்மத் பெற்றார்.
20 வருடங்களுக்கு மேலாக மலேஷியாவின் பிரதமராக பதவி வகித்தவர். 1969 ஆம் ஆண்டின் பின்னர் அவர் தேர்தலில் தோல்வியுற்றமை இதுவே முதல் தடவையாகும்.
97 வயதான மஹிதிர் மொஹம்மத்தின் 7 தசாப்த கால அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வரும் அறிகுறிகள் தென்படுவதாக கருதப்படுகிறது..
222 ஆசனங்களைக் கொண்ட மலேஷிய நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெறுவதற்கு 112 ஆசனங்கள் தேவை.
இந்நிலையில், முன்னாள் எதிர்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிமின் பகாட்டான் ஹரபான் கூட்டணி 83 ஆசனங்களை வென்றுள்ளது. முன்னாள் பிரதமர் முஹைதீன் யாசினின் பெரிகட்டான் நெஷனல் கூட்டணி 72 ஆசனங்களை வென்றுள்ளது.
இவ்விருவரும் இத்தேர்தல் வெற்றிக்கு உரிமை கோரி வருகின்றனர்.

