உப பொலிஸ் பரிசோதகர் மீண்டும் விளக்கமறியலில்…

71 0

பாடசாலை மாணவர் ஒருவரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் உப பொலிஸ் பரிசோதகர் டிசம்பர் 02 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

திஹகொட மிதெல்லவல பிரதேசத்தில் கடந்த மாதம் 28 ஆம் திகதி பிற்பகல் முச்சக்கர வண்டியில் சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சம்பவம் ஒன்று பதிவாகி இருந்தது.

சம்பவம் தொடர்பில் இன்று (18) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் உப பொலிஸ் பரிசோதகர் இன்று காலை மாத்தறை பிரதான நீதவான் இசுறு நெத்திகுமார முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

சந்தேகநபருக்கு பிணை வழங்குமாறு சந்தேகநபர் சார்பில் சட்டத்தரணிகள் நீதவானிடம் கோரிக்கை விடுத்தனர்.

இந்த துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸ் குழுவை மேற்பார்வையிடும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் மகேஷ் குமார நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைத்து பிணை வழங்குவதை வன்மையாக எதிர்ப்பதாக தெரிவித்தார்.

சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதவான் சந்தேக நபரை எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

கடந்த அமர்வில், இந்த சந்தேக நபர் அடையாள அணிவகுப்புக்கு முற்படுத்தப்பட்ட போது, ​​துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது முச்சக்கரவண்டியில் இருந்த மாணவர்களில் 4 மாணவர்கள் இந்த சந்தேக நபரான முன்னாள் உப பொலிஸ் பரிசோதகரை அடையாளம் கண்டிருந்தனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நாயிம்பல கடுவன்துடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய மாணவர் பி.பீ.ஹரிஷ் ஹங்சக, தற்போது கராப்பிட்டிய பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

நீதிமன்றத்திற்கு வந்த மாணவரின் மூத்த சகோதரி, தனது சகோதரர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து பொது வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அவர் சுவாசிக்கிறார், ஆனால் சுயநினைவின்றி இருப்பதாகவும் தெரிவித்தார்.

தற்போது தனது சகோதரரின் சிகிச்சைக்கு மருந்து உட்பட அன்றாட செலவுகள் தாங்க முடியாத அளவில் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.