கடன்பெற்று விருந்து உண்பதை தவிர்க்கும் புதிய பொருளாதார முறை

162 0

மிகவும் ஒரு இக்கட்டான காலகட்டத்தில் நாட்டின் 77 ஆவது மற்றும் அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத்திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. நாட்டில் நீண்ட காலமாக கடைபிடிக்கப்பட்டு வந்த பொருளாதார நடைமுறைகளை மாற்றியமைத்து புதிய சமூக பாதுகாப்பு திறந்த பொருளாதார முறை என்ற அடிப்படையிலான ஒரு பொருளாதார முறைமையை ஜனாதிபதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 2023 ஆம் வருடத்திற்கான வரவு செலவுத்திட்டத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

அதாவது வழமைப்போன்று இதுவரை காலமும் முன்வைக்கப்பட்டு வந்த பொருட்களின் விலையைக் குறைத்தல், சம்பள அதிகரிப்பு, மற்றும் நிவாரணம் போன்ற பிரபல்யமிக்க தீர்மானங்களை எடுக்காமல் நீண்டகால அபிவிருத்தியை நோக்கிய கட்டமைப்பு மாற்றத்துக்கான திட் டங்கள் அதிகளவில் பட்ஜட்டில் முன்வைக்கப்பட்டுள்ளன.

எனினும் வரவு செலவுத்திட்டத்தின் இலக்குகளை பார்க்கும்போது 7-8 சதவீத பொருளாதார வளர்ச்சி, சர்வதேச வர்த்தகத்தை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 100 சதவீதமாக அதிகரித்தல், 2023-2032 வரை புதிய ஏற்றுமதி ஊடாக டொலர் 3 பில்லியன் வருடாந்தம் அதிகரித்துக்கொள்ளல், வருடாந்தம் டொலர் 3 பில்லியன் நேரடி வெளிநாட்டு முதலீடுகளாக பெறல், எதிர்வரும் பத்து ஆண்டுகளினுள் உயர்தேர்ச்சிபெற்ற சர்வதேசளவில் போட்டிமிக்க தொழிற்படையை உருவாக்குதல் ஆகிய யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

முக்கியமாக ஜனாதிபதி பரிந்துரைத்துள்ள இந்த புதிய சமூக பாதுகாப்பு திறந்த பொருளாதார முறையில் மூன்று விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. முதலாவதாக ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட போட்டி, இரண்டாவதாக சூழல் நட்பான பசுமை மற்றும் நீல பொருளாதாரம் மற்றும் மூன்றாவதாக டிஜிட்டல் பொருளாதாரம் ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ளன. எனினும் பொருளாதார சுமை மற்றும் வாழ்க்கைச் செலவு உயர்வு என்பனவற்றினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, குறிப்பாக மாதம் சம்பளம் பெறுகின்றவர்கள், சிறிய நடுத்தர வர்த்தக முயற்சியாளர்கள், முறைசாரா வர்த்தக முயற்சியாளர்கள் உள்ளிட்ட தரப்பினருக்கு உடனடி நிவாரணங்கள் பட்ஜட்டில் முன்வைக்கப்படவில்லை என்பது பொருளாதார நிபுணர்களின் மதிப்பீடாக காணப்படுகின்றது.

மாறாக சுதந்திரம் பெற்று 100 ஆண்டுகள் நிறைவடைகின்ற 2048 ஆம் ஆண்டு ஆகின்றபோது அபிவிருத்தியடைந்த நாடாக இலங்கையை உருவாக்குவதற்கான பின்னணியுடன் 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜட் தயாரிக்கப்பட்டுள்ளதாக வரவு செலவுத்திட்டத்தை பாராளுமன்றத்தில் முன்வைத்த ஜனாதிபதி ரணில் அறிவித்திருக்கிறார். மிக முக்கியமாக வெளிநாடுகளிலிருந்து கடன்பெற்று விருந்து உண்பதற்கு இவ்வரவுசெலவுதிட்ட ஊடாக எதிர்பார்க்கவில்லை என்று ஜனாதிபதி மிகவும் திட்டவட்டமாக அறிவித்திருக்கிறார்.

இது இவ்வாறு இருக்க கல்வி, சுகாதாரம், விவசாயம் மற்றும் சமுத்திர வளங்கள், கைத்தொழில், வியாபாரம் மற்றும் முதலீடு, பாதுகாப்பு வெளிநாட்டு உறவுகள், போன்ற அனைத்தும் நவீனமயப்படுத்தபடவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசாங்க வருமானத்தை 2025 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 15 சதவீதமாக அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கின்றது. அது தற்போது 8.3 வீதமாக காணப்படுகின்றது,. முக்கியமாக வரி வருமானத்தை அதிகரிப்பதன் ஊடாக இந்த அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் தற்போது 60 வீதத்தை தாண்டியுள்ள பணவீக்கமானது நடுத்தர காலத்தில் குறைக்கப்படும் என்றும் இவற்றுக்கு இசைவாக, வங்கி வட்டி வீதங்களும் படிப்படியாக மிதமான மட்டத்தினை கொண்டுசெல்லப்படும் என்றும் பட்ஜட்டில் எதிர்பார்க்கப்படுகின்றது. அந்தவகையில் மிகவும் நெருக்கடியான சவாலான காலகட்டத்தில் 2023 ஆம் ஆண்டு 2 க்கான வரவு செலவுத்திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு காலகட்டத்தில் பட்ஜட் ஒன்றை தாக்கல் செய்வது என்பது இலகுவான விடயமல்ல. எப்படி முன்வைத்தாலும் அவற்றின் விளைவுகள் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதனை தவிர் 2 க்க முடியாது. மறுசீரமைப்பு யோசனைகள்

இந்நிலையில் நீண்டகால பொருளாதார அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்டு முன்வைக்கப்பட்டுள்ள மறுசீரமைப்பு செயற்பாடுகள் முக்கியமானதாகவே காணப்படுகின்றன. முக்கியமாக பொருளாதாரத்தை, பொருளாதார அபிவிருத்தியை நோக்கியதாக பல்வேறு மறுசீரமைப்பு மற்றும் நீண்டகால திட்டங்கள் காணப்படுகின்றன.

எனினும் பொருளாதார நிபுணர்கள் மற்றும் எதிர் தரப்பினரின் விமர்சனத்துக்கு உள்ளாகி இருப்பது இந்த வரவு செலவுத் திட்டத்தினூடாக தற்போது பாதிக்கப்பட்ட இருக்கின்ற மற்றும் பொருளாதார ரீதியாக கடுமையான சவால்களை எதிர்நோக்கியிருக்கின்ற மக்களுக்கு உடனடி நிவாரணங்கள் இதில் முன்வைக்கப்படவில்லை என்பதாகும். எனவே இது குறித்து கவனம் செலுத்தப்படவேண்டும். காரணம் தற்போதைய நிலைமையில் நாடு நீண்டகால பொருளாதார அபிவிருத்தியை நோக்கி பயணிப்பது மட்டுமன்றி உடனடியாக பாதிக்கப்பட்டிருக்கின்ற மக்களுக்கான மீட்சித் திட்டங்களும் அவசியமாகின்றன. அந்தவகையில் இந்த குறைபாட்டை அடுத்து வரும் காலங்களில் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

குறிப்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புதிய சமூக திறந்த பொருளாதார முறைமை ஒன்றை இதனூடாக அறிமுகப்படுத்தியிருக்கிறார். அதில் அவர்களுக்கு கசினோவுக்கு வரி விதித்தல், நிறுவன ரீதியான மாற்றங்களை ஏற்படுத்தல், வரி முகாமைத்துவம், தனியார்மயப்படுத்தல் செயற்பாடுகள், ஏற்றுமதி இறக்குமதியில் காணப்படும் கட்டுப்பாடுகளை தளர்த்தல், வெளிநாட்டு முதலீடுகளில் காணப்படுகின்ற கட்டுப்பாடுகளை தளர்த்தல், செஸ் வரிகளை படிப்படியாக நீக்குதல், சர்வதேசத் வர்த்தகத்துக்கு உகந்த சூழலை உருவாக்குதல், வரி வருமானத்தை அதிகரித்தல் போன்ற பல்வேறு யோசனைகளை முன்வைத்திருக்கிறார்.

சமூக நிவாரணம்?

ஆனால் இங்கு சமூக நீதி அதாவது தற்போதைய சூழலில் பாதிக்கப்பட்டு இருக்கின்ற மக்களுக்கான நிவாரணங்கள் எங்கே என்பது முக்கியமான விடயமாகவுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டிருக்கின்ற எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பொருளாதார நிபுணர் ஹர்ஷ டி, சில்வா பொருளாதார ரீதியில் இந்த வரவு செலவுத்திட்டம் சிறந்ததாக காணப்படுகிறது. ஆனால் அந்த வரவு செலவுத்திட்டத்தின் சமூக ரீதியான அரசியல் ரீதியான நிவாரணம் எங்கே? அந்த இந்த வரவு செலவுத் திட்டம் சமூக நீதியை தவற விட்டு விட்டது என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்.

தற்போதைய சூழலில் கொரோனா வைரஸ் தாக்கம், நாடு முடக்கப்பட்டமை, டொலர் நெருக்கடி, பொருட்களின் விலை அதிகரித்தமை, எரிபொருட்கள் விலை அதிகரிப்பு, சேவைகளின் பொருட்களின் கட்டணங்கள் விலைகள் கடுமையாக உயர்வடைந்தமை, சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகங்கள் பாதிக்கப்பட்டமை 70 வீதத்தை தாண்டிய பணவீக்கம் போன்ற பல நெருக்கடிகள் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக மாத சம்பளம் பெறுகின்ற மக்கள், அன்றாடம் தொழில் செய்து பிழைப்பை நடத்திக்கொண்டுள்ள மக்கள் கடுமையானதொரு பொருளாதார நெருக்கடியை சந்தித்துவருகின்றனர். இந்த மக்களுக்கான உடனடி மீட்சித்திட்டங்கள் இந்த வரவு செலவுத்திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை என்ற விடயம் முன்வைக்கப்படுகிறது. எனினும் அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களுக்கான கொடுப்பனவுகள் மற்றும் நிவாரண உதவிகளை மேற்கொள்வதற்கான திட்டங்கள் இருப்பதாக சுட்டிக் காட்டியுள்ளது. பட்ஜட் மீதான நேற்றைய பாராளுமன்ற விவாதத்தில் உரையாற்றிய நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வாறு நிவாரணங்கள் வழங்கப்படும் என்ற விடையத்தை வெளிப்படுத்தியிருந்தார். நிவாரண உதவி கோரியுள்ள

37 இலட்சம் குடும்பங்கள்

அதாவது அரசாங்கம் கடந்த மாதம் அரசாங்கத்தின் நிவாரண உதவி தேவைப் படுகின்ற மக்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தது. அதன்படி நாட்டில் காணப்படுகின்ற 57 இலட்சம் குடும்பங்களில் 37 லட்சம் குடும்பங்கள் தமக்கு நிவாரண உதவிகள் அவசியம் என்றுகோரி விண்ணப்பித்துள்ளன. ஜனவரி மாதமளவில் இது தொடர்பான தெரிவுகள் இடம்பெற்று ஏப்ரல் மாதத்தில் இருந்து தகுதியான குடும்பங்களுக்கு வாழ்வதற்கான நிவாரண உதவி பெற்றுக் கொடுக்கப்படும் என்று நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய அறிவித்துள்ளார். அந்தவகையில் அந்த செயற்பாடுகள் விரைவுபடுத்தப்பட வேண்டும். அவை தாமதப்படுத்தப்படாமல் தகுதியானவர்கள் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கான பொருளாதார மற்றும் உணவுத் தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்கான நிவாரண உதவிகள் வழங்கப்படுவது இன்றியமையாதது.

இதேவேளை 2023 க்ககான வரவு-செலவுத் திட்டத்தின் பிரகாரம் அடுத்த வருடத்திற்கு சமுர்த்தி கொடுப்பனவுக்காக 20750 மில்லியன் ரூபாவும் முதியோருக்கான கொடுப்பனவுக்காக 3000 மில்லியன் ரூபாவும் குறைந்த வருமானம் பெறும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவியாக 250 மில்லியன் ரூபாவும் சிறுநீரக நோயாளிகளுக்கான கொடுப்பனவுக்காக 200 மில்லியன் ரூபாவும் மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிதி உதவிக்காக 18800 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. எனவே இந்த செயல்பாடு விரிவுபடுத்தப்பட்டு நிவாரண உதவிகள் பாதிக்கப்பட்ட மக்களை சென்றடைவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும். மேலும் சிறுவர் போஷாக்குக்கு 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன் இளம் பெண் தொழில்முயற்சியாளர்களை ஊக்குவிக்க 250000 ரூபா சலுகைக் கடன் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்க விடயங்கள்.

ஏற்றுமதி வருமானத்தை அதிகரித்தல்

ஏற்றுமதி வருமானத்தை வருடாந்தம் மூன்று பில்லியன் டொலர்களாக அதிகரிப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. தற்போது இலங்கைக்கு வருடாந்தம் 10 முதல் 12 பில்லியன் டொலர்கள் ஏற்றுமதி வருமானமாக கிடைக்கின்றன. அதனை தற்போது 15 பில்லியன் டொலர்களாக அதிகரிப்பதற்கு ஜனாதிபதி வரவு செலவுத் திட்டத்தில் யோசனை முன்வைத்திருக்கின்றார். ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். எனினும் தற்போது வருமான வரி விகிதம் 30 வீதத்தை தாண்டிய எல்லையில் அமைந்திருக்கிறது. அதாவது 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவுக்கு அதிகமாக வருமானம் உழைக்கின்ற சகலரும் 30 வீதத்தை தாண்டி வரி செலுத்தவேண்டும். இவ்வாறு அதிகளவு வரியை விதிக்கும்போது எவ்வாறு ஏற்றுமதி வருமானம் அதிகரிக்கும் என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது. அதேபோன்று சுங்க வரிகள் 0, 5, 10, 15, வீதமாக இருந்த நிலையில் தற்போது அவை 0, 10, 15, 20 என்ற அடிப்படையில் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன. எனவே இறக்குமதி செய்யப்படுகின்ற பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் நிலைமை இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். ஆடை துறையிலேயே அதிகளவு ஏற்றுமதி வருமானம்

பெறப்படுகின்றது. ஆனால் அதற்கான உள்ளீடுகள் மூலப்பொருட்களை இறக்குமதி செய்யவேண்டும். அந்த மூலப்பொருட்களை இறக்குமதி செய்யும்போது இந்த சுங்கவரி அதிகரிக்கப்படுமாயின் அதுவும் ஏற்றுமதி வருமானத்தில் தாக்கத்தை செலுத்தும். இந்த பட்ஜட் தொடர்பாக பொருளாதார நிபுணர், கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பொருளியல் துறை விரிவுரையாளர் கலாநிதி கணேசமூர்த்தி இவ்வாறு விபரிக்கிறார். அதாவது நடுத்தர வர்க்க பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்புகளை இந்த வரவுசெலவுத்திட்டம் பூர்த்திசெய்யவில்லை. நீண்டகால ரீதியான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய வண்ணம் இந்த வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்றைய உடனடி பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை. உழைக்கும் வர்க்கம் வாழ்க்கைச் செலவு உயர்வினால் பாரிய நெருக்கடிகளை சந்தித்து வருகின்றது. அவர்களை 2024ஆம் ஆண்டு வரை பொறுத்திருக்குமாறு இந்த வரவு செலவுத்திட்டத்தில் கூறப்பட்டுள்ளது. அப்படியானால் 2024 ஆம் ஆண்டு வரை அவர்கள் எவ்வாறு உயிர் வாழ்வது என்பது இங்கு கூறப்படவில்லை. அதேபோன்று மறுசீரமைப்புக்கள் இருக்கின்றன. 8 வீத பொருளாதார வளர்ச்சி, முதலீடுகளை அதிகரித்துக்கொள்ளல், ஏற்றுமதி வருமானத்தை அதிகரித்தல் என்பன முன்வைக்கப்பட்டுள்ளன. அவை இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த காலப்பகுதியில் இருந்து முன்வைக்கப்படுகின்ற யோசனைகளாகும். ஆனால் அது எவ்வாறு அடையப்படும் என்று விபரமில்லை. மேலும் இறக்குமதி சுங்க வரியும் அதிகரிக்கப்படுகிறது. இதனால் இறக்குமதி பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் அபாயம் இருக்கின்றது. இந்த பட்ஜட்டில் வரி வருமானத்தை அதிகரிப்பது ஒரு நோக்கமாக கொண்டு இருப்பதாக காணமுடிகிறது. வரி வருமானத்தை அதிகரிக்க வேண்டுமானால் அது படிப்படியாக செய்யப்பட வேண்டும். இன்றேல் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இவ்வாறு கணேசமூர்த்தி கூறுகிறார்.

பொருளாதார சுமையை குறைக்கவேண்டும்

எப்படியிருப்பினும் நெருக்கடியான காலகட்டத்தில் தற்போது இந்த வரவு செலவுத் திட்டம் முன் வைக்கப்பட்டிருக்கும் நிலையில் நீண்டகால பொருளாதாரத் திட்டங்களை தவிர் 5 க்க முடியாது. அதற்கான பொருளாதார கட்டமைப்பு ரீதியான மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். ஆனால் அதேநேரம் தற்போது உடனடியாக பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் ஆராய்ந்து அவர்களுக்கான நிவாரண உதவிகள் உறுதிப்படுத்தப்படுவதும் அவசியமாகும். இந்நிலையில் வரவு செலவுத்திட்டம் விவாதிக்கப்பட்டுவருகின்றது. டிசம்பர் மாதம் நடுப்பகுதிவரை விவாதம் நடைபெறும் நிலையில் அந்த விவாதங்களின் ஊடாக முன்வைக்கப்படுகின்ற விடயங்களை ஆராய்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். வாழ்க்கை செலவு உயர்வினால் நசுங்கிப் போயிருக்கும் மக்களுக்கான நிவாரணத் திட்டங்கள் உள்ளடக்கப்பட வேண்டியதும் அவசியமாக இருக்கின்றது. நீண்டகால மற்றும் குறுகியகால திட்டங்கள் என்பன சமாந்தரமாக பயணிக்க வேண்டிய தேவை காணப்படுகிறது.

ரொபட் அன்டனி