“இது சரியல்ல” – கனடா அதிபர் ட்ரூடோவிடம் கோபித்துக்கொண்ட சீன அதிபர்

166 0

இந்தோனேசியாவில் நடந்து முடிந்த ஜி-20 உச்சி மாநாட்டில் கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோவிடம், சீன அதிபர் ஜி ஜின்பிங் கோபித்துக்கொண்ட வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேசியாவின் பாலி நகரில் நவம்பர் 15, 16 தேதிகளில் ஜி-20 நாடுகள் கூட்டமைப்பின் உச்சி மாநாடு நடந்தது. இந்தக் கூட்டத்தில் 2023-ஆம் ஆண்டுக்கான தலைமையை இந்தியா ஏற்றுக்கொண்டது. இந்தியா, சீனா, அமெரிக்கா, கனடா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், ஜொ்மனி, இத்தாலி, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, பிரேசில், அர்ஜென்டினா, மெக்சிகோ, தென் கொரியா, இந்தோனேசியா, ஜப்பான், துருக்கி, சவூதி அரேபியா ஆகிய 19 நாடுகளுடன் ஐரோப்பிய ஒன்றியமும் ஜி-20 கூட்டமைப்பின் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்த நிலையில், ஜி-20 மாநாட்டில் கேமரா முன்னிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் கோபித்துக்கொண்ட வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் சீன அதிபர் ஜி ஜின்பிங், “இரு நாடுகள் இடையே நடக்கும் விவாதங்கள் பற்றிய விவரங்கள் அனைத்தும் செய்தித்தாள்களுக்கு கசிந்துள்ளது. இது சரியானதாக இல்லை. இதில் உங்கள் தரப்பில் நேர்மை இல்லை” என ஜி ஜின்பிங் கோபமாக கூறினார். இதற்கு ஜஸ்டின் பதிலளிக்கும்போது, “கனடாவில் நாங்கள் வெளிப்படைத்தன்மையை விரும்புகிறோம். அதைதான் நாங்கள் நம்புகிறோம். இதனை நாங்கள் தொடர்ந்து செய்வோம்” எனக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து ட்ரூடோவிடம் கைக்குலுக்கிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார் ஜி ஜின்பிங். இதுதொடர்பான வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.