இலங்கையைச் சேர்ந்த 12 பெண்கள் வீட்டுப்பணிக்காக அபுதாபிக்கு அழைத்து செல்லப்பட்டு ஓமானில் நடைபெற்ற விழாவொன்றில் பாலியல் தொழிலுக்காக பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நீதி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தது.
பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன விசேட கூற்றொன்றை முன்வத்து அபுதாபியில் வீட்டுப்பணிப்பெண் தொழிலில் அமர்த்துவதாக தெரிவித்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கையை சேர்ந்த 12 பெண்கள் ஓமானுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
ஓமானுக்கு அனுப்பிவைக்கப்பட்ட குறித்த பெண்கள் அங்கு நடைபெற்ற விழாவொன்றில் பாலியல் தொழிலுக்காக பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளனர்.
தமது பிள்ளைகளின் எதிர்காலம் கருதி, தற்போதைய பொருளாதார பாதிப்பை தாங்கிக் கொள்ள முடியாத தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பினை தேடிச்செல்கின்றனர். இந்த நிலையில்,? எமது நாட்டின் பொருளாதார நெருக்கடியினை சீர்செய்ய தன்மானத்தை அடகு வைக்க முடியாது.எனவே இது தொடர்பில் நீதி அமைச்சர் ஏன் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள், விதிமுறைகளையும் நியதிகளையும் மீறி செயற்படுகின்றன. அதேபோன்றுதான் சிலரின் நடவடிக்கைகளினால் இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றிருக்க ஏதுநிலை காணப்படுகின்றது. ஆகையினால் குறித்த சம்பவம் தொடர்பில் அவதானம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொளப்படும் என்றார்.

