அரசாங்கத்தின் தவறான தீர்மானங்களினாலேயே நாடு வங்குரோத்து நிலையை அடைந்தது

176 0

விவசாயத்துறையில் முட்டாள்தனமாக சேதன பசளை திட்டத்தை முழுமையாக அமுல்படுத்தியமை பொருளாதார பாதிப்பை சடுதியாக தீவிரப்படுத்தியது. ரஷ்யா-யுக்ரைன் யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன்னரே அரசாங்கத்தின் தவறான தீர்மானங்களினால் நாடு வங்குரோத்து நிலை அடைந்து விட்டது என்ற உண்மையை அரசாங்கம் வெளிப்படைத் தன்மையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (நவ. 16) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்க்கொண்டுள்ள பின்னணியில் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.பொருளாதார நெருக்கடியின் உண்மை தன்மையை அரசாங்கம் பகிரங்கப்படுத்தவில்லை.வரவு செலவுத் திட்டத்திற்கு பதிலாக ஜனாதிபதி கொள்கை இலக்கினை முன்வைத்துள்ளார்.

தவறான அரசியல் மற்றும் பொருளாதார தீர்மானங்களினால் நாடு இன்று வங்குரோத்து நிலை அடைந்துள்ளது.ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் காரணமாக பொருளாதாரம் இலங்கையின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் யுத்தம் ஆரம்பமாகுவதற்கு முன்னர் அரசாங்கத்தின் தவறான தீர்மானங்களினால் இலங்கையின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு, நாடு வங்குரோத்து நிலை அடைந்து விட்டது என்பதே உண்மை. அரசாங்கத்தின் தீர்மானங்கள் மக்களுக்கு சாதகமாக அமையவில்லை.

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு ஒட்டுமொத்த மக்களுக்கும் பெரும் சுமையாக மாறியுள்ளது. வுpவசாயத்துறையில் சேதன பசளை திட்டத்தை ஒரே கட்டத்தில் அறிமுகப்படுத்தும் முட்டாள் தனமான தீர்மானம் முழு நாட்டுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சேதன பசளை திட்டத்தினால் முழு விவசாயத்துறையும் வீழ்ச்சியடைந்துள்ளது.

விவசாயத்துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பிற்கு மத்தியில் அரசாங்கம் சுமார் 8 இலட்சம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்துள்ளது, தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட அரிசிக்கு உத்தரவாத விலை வழங்காத காரணத்தினால் விவசாயிகள் தமது விளைச்சலை விற்பனை செய்ய முடியாத நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பாதீட்டின் பரிந்துரைகளை முழுமையாக அமுல்படுத்தினால் சமூக கட்டமைப்பு முழுமையாக பாதிக்கப்பட்டு நாட்டில் மீண்டும் மக்கள் போராட்டம் தலைதூக்கி,அது அரசியல் நெருக்கடியையும் தோற்றுவிக்கும்.