கடன் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு உதவக்கூடிய கடன் சலுகை முறையை உடனடியாகத் தயாரிப்பது அவசியம்

206 0

மிகுந்த கடன்நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் நாடுகளின் கடன்சுமையைக் குறைக்கக்கூடியவகையில் செயற்திறன்மிக்க கடன் சலுகை முறையொன்றை உடனடியாகத் தயாரிக்கவேண்டியது அவசியம் என்று சுட்டிக்காட்டியிருக்கும் உலக வங்கிக் குழுமத்தின் தலைவர், இதுகுறித்து ஜி-20 நாடுகள் விரிவாக ஆராயவேண்டும் என்று வலியுறுத்தியிருக்கின்றார்.

இந்தோனேஷியாவின் பாலியில் நடைபெற்றுவரும் ஜி-20 அரசதலைவர்கள் மாநாட்டில் நேற்று முன்தினம் உரையாற்றிய உலக வங்கிக் குழுமத்தின் தலைவர் டேவிட் மல்பாஸ், தற்போது பெரும்பாலான உலகநாடுகள் பட்டினி, வறுமை, ஸ்திரமற்ற கடன்கள் உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்துவருவதாக சுட்டிக்காட்டினார்.

அதேபோன்று மிகுந்த கடன்நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் நாடுகளின் கடன்சுமையைக் குறைக்கக்கூடியவகையில் செயற்திறன்மிக்க கடன் சலுகை முறையொன்றை உடனடியாகத் தயாரிக்கவேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். இதுகுறித்து ஜி-20 நாடுகள் விரிவாக ஆராய்வதைத் தாம் ஊக்குவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் கடன் நெருக்கடியின் விளைவாக இலங்கை போன்ற நாடுகள்மீது ஏற்பட்டிருக்கும் தாக்கங்கள் குறித்து இம்முறை ஜி-20 நாடுகள் கலந்துரையாடுவதற்குத் திட்டமிட்டிருப்பதாக ரொயிட்டர் செய்திச்சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

அதன்படி பின்தங்கிய நிலையிலுள்ள நடுத்தர வருமானம்பெறும் நாடுகள் முகங்கொடுத்திருக்கும் மிகமோசமான கடன் நிலைவரம் குறித்து ஜி-20 நாடுகளின் தலைவர்கள் தமது கரிசனையை வெளிப்படுத்துவர் என்றும், கடன் சீரமைப்பு தொடர்பில் முன்வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு உரியவாறான பிரதிபலிப்பைக் காண்பிக்குமாறு பொது மற்றும் தனியார் கடன்வழங்குனர்களிடம் கோருவர் என்றும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.