நெற்றியில் காயத்துடன் முன்னாள் போராளி சடலமாக மீட்பு

65 0

வவுனியா – கோதாண்டர்நொச்சிக்குளம் பகுதியில் முன்னாள் போராளியான இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கோதாண்டர்நொச்சிக்குளம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த 33 வயதான கோபு என்று அழைக்கப்படும் மூன்று பிள்ளைகளின் தந்தையான முன்னாள் போராளியேநேற்று (19) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குடும்பத்தினருடன் நேற்றிரவு உறங்கச்சென்றவர், நேற்று (19)  காலை வீட்டின் முன் மண்டபத்தில் சடலமாக காணப்பட்டுள்ளார். இந்நிலையில் அருகில் உறங்கிய கணவனைக் காணவில்லை என தேடியபோது அவர் தூங்கில் தொங்கியவாறு காணப்பட்டதாகவும், சடலத்தை கீழ் இறக்கி விட்டு உறவினர்களை அழைத்ததாகவும் உயிரிழந்த நபரின் மனைவி தெரிவித்துள்ளார்.

உறவினர்கள் சம்பவ இடத்திற்கு சென்றபோது சடலம் நிலத்தில் இருந்துள்ளதுடன் அவரது நெற்றியில் காயம் ஒன்றும் காணப்படுவதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பாக பொலிசாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற ஈச்சங்குளம் பொலிசார் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இன்று காலை சம்பவ இடத்திற்கு சென்ற திடீர் மரணவிசாரணை அதிகாரி எஸ்.சுரேந்திரன், சடலத்தைப் பார்வையிட்டதுடன், பிரதே பரிசோதனைக்கு உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மனைவி வெளியிட்டுள்ள கருத்து தொடர்பில் சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார் கொலையா? அல்லது தற்கொலையா? என்பது குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.