கிழக்கு மாகாணத்தை தவிர்த்து வடக்குடனான எந்தப் பேச்சுவார்த்தையும் வெற்றிபெறப்போவதில்லை

168 0

கிழக்கு மாகாணத்தை தவிர்த்து வடக்குடனான ஜனாதிபதியின் எந்தப் பேச்சுவார்த்தையும் வெற்றிபெறப்போவதில்லை. எனவே வடக்கு தமிழ் பாராளுமன்ற  உறுப்பினர்களுக்கு  மட்டும்  பேச்சுவார்த்தைக்கு விடுத்த அழைப்பை  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீள் பரிசீலனை செய்ய வேண்டும்.

சுதந்திர தினத்துக்குள்  தமிழ் மக்களின் எந்தப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படப்போகின்றது?  இனப்பிரச்சினைக்கா அல்லது பொருளாதாரப் பிரச்சினைக்கா என்பது தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (16) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

வடக்கு மாகாண தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு எதிர்வரும் சுதந்திர தினத்துக்குள் தீர்வு காணப்போவதாகவும் அதற்காக வடக்கு மாகாண தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன்  விரைவில் பேச்சுவார்த்தை  நடத்தப் போவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையின்போது குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு தொடர்பில் எமக்கு இரு பிரச்சினைகள் உண்டு. ஒன்று எதிர்வரும் சுதந்திர தினத்துக்குள்  தமிழ் மக்களின் எந்தப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படப்போகின்றது? இனப்பிரச்சினைக்கா அல்லது பொருளாதாரப் பிரச்சினைக்கா என்பது தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும்.

அடுத்ததாக வடக்கு மாகாண தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு எதிர்வரும் சுதந்திர தினத்துக்குள் தீர்வு காணப்போவதாகவும் அதற்காக வடக்கு மாகாண தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன்  விரைவில் பேச்சுக்களை நடத்தப் போவதாகவுமே ஜனாதிபதி அறிவித்துள்ளார். அவர் நடத்தும்  பேச்சுவார்த்தை  இனப்பிரச்சினை தொடர்பானதாக இருந்தால் கிழக்கு இல்லாத வடக்குடனான ஜனாதிபதியின் எந்தப்பேச்சுக்களும்  வெற்றிபெறப்போவதில்லை என்பதனை ஜனாதிபதிக்கு கூற விரும்புகின்றோம்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்ற ஜனாதிபதியின் அறிவிப்பு சிறந்தது. அதனை வரவேற்கின்றோம். முன்னாள் ஜனாதிபதி கூட இதற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

எனவே இந்த சந்தர்ப்பத்தை சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டுமானால் வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஜனாதிபதி வடக்கு ,கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு  அழைப்பு விடுக்க வேண்டும்.அவ்வாறான பேச்சுக்களே வெற்றி பெறும் .எனவே ஜனாதிபதி தனது வடக்கிற்கு மட்டுமான  பேச்சுக்கான அழைப்பை மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.