இந்தியாவுக்கு சென்று துணி மணிகளை கொள்வனவு செய்து எடுத்து வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் போது, ஜா எல பகுதியில் வைத்து பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் பயணித்த வாகனத்தை மறித்து அவர்களைக் கைது செய்து, அவர்கள் உடமையிலிருந்த 40 இலட்சம் ரூபா வரை பெறுமதி மிக்க வெளிநாட்டு நாணயம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையிட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், களனி வலய குற்ற விசாரணைப் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட நால்வர் கொண்ட குழு நீதிமன்றில் இன்று திங்கட்கிழமை (14) சரணடைந்தது.
குறித்த நலவருக்கும் எதிராக சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று குறித்த நால்வரும் சட்டத்தரணிகள் ஊடாக மன்றில் சரணடைந்தனர்.
இந் நிலையில் அவர்களை சந்தேக நபர்களாக ஏற்றுக்கொண்ட கொழும்பு மேலதிக நீதிவான் ஹர்ஷன கெக்குனவல, சந்தேக நபர்கள் நால்வரையும் எதிர்வரும் 25 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
25 ஆம் திகதி குறித்த சந்தேக நபர்களை அடையாள அனிவகுப்புக்கு உட்படுத்துமாறு கட்டளையிட்ட நீதிவான் ஹர்ஷன கெக்குணவல, அதற்காக அவர்களின் அடையாளங்களை மறைத்து மன்றில் ஆஜர் செய்யுமாறு சிறைச்சாலைகள் அத்தியட்சருக்கு உத்தரவிட்டார்.
மேல் மாகாணத்தின் வடக்கு பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரேமரத்னவுக்கு சம்பவத்துக்கு முகம் கொடுத்ததாக கூறப்படும் மூவரும் செய்த முறைப்பாட்டுக்கு அமைவாக, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஏ.ஜே.வை.டி. கிரிஷாந்தவின் நேரடி கட்டுப்பாட்டில் சிறப்புக் குழுவொன்று இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர், சார்ஜன் ஒருவர், இரு கான்ஸ்டபிள்கள் அடங்கிய நால்வர் கொண்ட குழுவை கைது செய்யவே இவ்விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தற்காலிகமாக கடமையிலிருந்தும் இடை நிறுத்தப்பட்டனர். அவர்கள் விசாரணை ஆரம்பித்தது முதல் தலைமறைவான நிலையில் இவ்வாறு இடை நிறுத்தப்பட்டனர்.
இந் நிலையில் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆரம்பகட்ட விசாரணையிகளில், கடந்த 9 ஆம் திகதி இரவு குறித்த பொலிஸ் குழு, தனியார் ஒருவரின் வேனில் சென்று இந்த கொள்ளையை அரங்கேற்றியுள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
இது தொடர்பில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆரம்பகட்ட விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், சட்ட விரோதமாக நடடுக்குள் தங்க நகைகள், வெளிநாட்டு நாணயங்களை கடத்துவது தொடர்பில் கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றுக்கு அமைய குறித்த சுற்றிவளைப்புக்காக தாங்கள் சென்றதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் அவர்கள் அந்த சுற்றிவளைப்பு தொடர்பில் உயரதிகாரிகள் எவருக்கும் அறிவித்திருக்கவில்லை என மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர், இந்தியாவிலிருந்து கட்டுநாயக்கவுக்கு வந்து அங்கிருந்து கொழும்பு நோக்கி வேன் ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்துள்ளனர்.
அந்த வேனை பின் தொடர்ந்து தனியார் வேன் ஒன்றில் வந்துள்ள இந்த பொலிஸ் குழு, அவர்களை ஜா எல பகுதியில் வைத்து மறித்து கைது செய்துள்ளனர்.
கொழும்பு 13 கதிரேசன் வீதிஅயைச் சேர்ந்த ஒருவர், தெஹிவளையைச் சேர்ந்த ஒருவர் மற்றும் வாரியப்பொல பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் மூவரும் குறித்த உப பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான குழுவினரால் பின்னர் பேலியகொடை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். விசாரணைகளின் போது அடிக்கடி இந்தியாவுக்கு சென்று துணிமணிகளை எடுத்துவரும் குழுவினரே அவர்கள் என தெரியவந்துள்ளது.
எனினும் பொலிஸ் நிலையம் அழைத்து வரப்பட்ட அவர்கள், உயர் பொலிஸ் அதிகாரிகளின் ஆலோசனைகள் எதனையும் பெற்றுக்கொள்ளாமல், பொலிஸ் புத்தகங்களிலும் எந்த பதிவினையும் இடமால், கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இரவோடிரவாக விடுவிக்கப்பட்ட அவர்கள், மறு நாள் 10 ஆம் திகதி, பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரேமரதனவை சந்தித்து, முறைப்பாடளித்துள்ளனர்.
தம்மை கைது செய்து விடுவித்த பொலிஸ் குழுவினர், கைது செய்யும் போது அவர்களின் பொறுப்பிலெடுத்த 6 மோதிரங்கள், 4 தங்க வளையல்களையும் 38000 அமரிக்க டொலர்களையும் திருப்பித் தரவில்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந் நிலையிலேயே தற்போது குறித்த நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களும் நீதிமன்றில் சரணடைந்துள்ளனர்.

