பொருளாதாரத்தை மீளக்கட்டி யெழுப்புவதில் எதிர்க்கட்சிக்கும் தார்மீக பொறுப்பு உள்ளது

222 0

நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவது ஆளும் கட்சியின் பொறுப்பு மட்டுமன்றி எதிர்க்கட்சி உட்பட அனைவருக்கும் அந்த தார்மீக பொறுப்பு உள்ளது என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (14) அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டம் முன்வைக்கப்பட்ட பின்னர், அதுதொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

கிராமப் பகுதி இளைஞர்களை பொருளாதார உற்பத்தியில் ஈடுபடுத்தி ஊக்குவிக்கும் திட்டம் இந்த வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

அது நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். கடந்த காலங்களில் இளைஞர்களை தொழில் முயற்சிகளில் ஈடுபடுத்துவது தொடர்பில் அதிகம் பேசப்பட்டது எனினும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.

அதேபோன்று விவசாய உற்பத்தி பொருளாதாரத்தில் இளைஞர்களை பங்கேற்க செய்வது தொடர்பிலும் பேசப்பட்டது. எனினும் அதை நடைமுறைப்படுத்துவது கஷ்டமான காரியமாக இருந்தது.

அதனை நடைமுறைப்படுத்தும் வகையில் மகாவலி அதிகார சபை,தொல்பொருள் திணைக்களம்,வனஜீவராசிகள் திணைக்களம் உள்ளிட்ட நிறுவனங்களின் கீழ் உள்ள காணிகளை மீட்டெடுத்து இளைஞர்களுக்கு விவசாய உற்பத்திக்கு வாய்ப்பு அளிப்பது தொடர்பில் இந்த வரவு செலவுத் திட்டத்தில் திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அது வரவேற்கத்தக்கது என்றார்.