சீர்காழி, தரங்கம்பாடியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 1,000 நிவாரணம் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

60 0

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, டெல்டா மாவட்டங்களில் அதிக அளவில் கனமழை பெய்து வருகிறது. இந்த அதீத கனமழையால் மயிலாடுதுறை, கடலூர், பூம்புகார், சீர்காழி ஆகிய பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. சீர்காழியில் மட்டும் 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6 மணி நேரத்தில் 44 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது.

தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக சீர்காழி பகுதியில் திரும்பிய திசையெல்லாம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதற்கிடையே, கடலூர் மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.

கடலூர் மாவட்டத்தை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டார். சீர்காழியில் மழை பாதிப்புகளை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாய், போர்வை, அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை வழங்கினார்.

இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் உள்ள குடும்பங்களுக்கு இழப்பீடு அறிவித்துள்ளார். அதன்படி, குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 இழப்பீடு வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளர். மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை முறையாக கணக்கெடுத்த பின் நிவாரணம் வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.