மலையகத்தை பொறுத்தவரையில் நாங்கள் 200 வருடங்கள் வாழ்ந்தாலும், அதற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் தொடர்கின்றது.
நாட்டுக்கு அந்நிய செலாவணியை ஈட்டிக் கொடுப்பதில் பெரும் பங்கு வகித்தாலும், அதற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்தார்.
அண்மையில் கண்டி ரஜவெல இந்து தேசிய கல்லூரியின் பரிசளிப்பு விழா பல்லேகலையில் அமைந்துள்ள மத்திய மாகாண சபையின் பிரதான கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
கல்லூரி அதிபர் எம். கோகிலேஸ்வரி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
எமது நாட்டின் ஜனாதிபதி மலையக மக்களின் உயர்வுக்காகவும் மலையக மக்களை தேசிய நீரோட்டத்தில் இணைத்துக்கொள்வதற்காகவும் நடவடிக்கைகளை மேற்கொண்டு, அதற்காக ஒரு குழுவை அமைப்பதற்கும் தீர்மானித்துள்ளார்.
அந்தக் குழுவுக்குள் உள்வாங்கப்பட வேண்டியவர்களை சிபாரிசு செய்யும்படி எம்மிடம் கோரிக்கையும் விடுத்திருக்கிறார்.
ஒரு முக்கியமான விடயத்தை நான் அவர்களிடத்தில் முன்வைத்துள்ளேன். இதற்கான குழுக்களை அமைப்பதற்கு அவசியம் கிடையாது.
எங்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முதலில் இந்நாட்டிலே காணப்படும் பாரபட்சம் என்ற ஒரு விடயத்தை மட்டும் அகற்றுங்கள்.
மலையக மக்களின் பிரச்சினைகள் இயல்பாகவே தீர்ந்துபோகும் என்ற விடயத்தை நான் சுட்டிக்காட்டினேன்.
எந்த விடயத்தை எடுத்துக்கொண்டாலும், நமது நாட்டில் பாரபட்சம் என்ற விடயமும், மாற்றாந்தாய் மனப்பான்மையுடனான செயற்பாடும் எமது சமூகத்துக்கு தலைவிதியாக இருந்துகொண்டிருக்கிறது.
இந்த பாரபட்சமும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் கூடிய செயற்பாடும் நீக்கப்பட்டால் போதும். நாம் ஏனையவர்களுக்கு நிகரானவர்கள் அல்லது ஒருபடி மேலானவர்கள் என்ற அந்தஸ்தை பெற முடியும்.
மலையக மக்கள் ஒவ்வொருவரும் பாரபட்சம் என்ற நிலைக்கு முகங்கொடுத்தவர்களாகவே உள்ளனர்.
ஆகவே, புதிதாக குழுக்கள் அமைக்கவோ அல்லது புதிதாக எமது மக்களின் பிரச்சினைகளை என்னவென்று தேடிப் பார்த்து பரிகாரம் காண வேண்டிய அவசியமோ கிடையாது.
பாரபட்சம் என்ற விடயம் நீக்கப்பட்டாலே நாங்கள் எமக்கான இலக்கை நோக்கி மிக விரைவாக பயணிக்க முடியும். அதை அடையவும் முடியும்.
200 வருடங்கள் கடந்திருக்கின்றன. ஆனால், துரதிர்ஷ்டவசமாக எம் மத்தியில் இதுவரைக்கும் ஒன்பது பேராசிரியர்களே உருவாகியுள்ளார்கள் என்பதுதான் கவலைக்குரிய விடயம்.
நாங்கள் எவரோடும் போட்டி போடக்கூடியவர்கள். வாய்ப்பில்லாத நிலைமை எமது முன்னேற்றத்துக்கு தடையாக இருக்கின்றது. எனவே, வாய்ப்புகளை பெறுவதற்கு முயற்சி செய்வோம்.
கல்வி இராஜாங்க அமைச்சராக நான் எவ்வளவு காலம் இருப்பேன் என்று தெரியாது.
நாட்டிலே இருக்கும் அரசியல் நிலைமை, அரசியல் களம் அவ்வப்போது மாறிக்கொண்டு வருகிறது.
30 தினங்கள், மூன்று மாதங்கள் அல்லது மூன்று வருடங்கள் இராஜாங்க அமைச்சராக இருப்பேனா என்று தெரியாது. ஆனால், நான் இருக்கும் காலத்தில் இப்பாடசாலைக்கு எவையெல்லாம் செய்ய வேண்டுமோ அவற்றையெல்லாம் செய்ய வேண்டும் என்று கங்கணம் கட்டியவனாக உள்ளேன் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வில் முன்னாள் மத்திய மாகாண சபையின் சபைத் தலைவர் துரை மதியுகராஜா, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர், பிரஜாசக்தி நிறுவனத்தின் பணிப்பாளர் பாரத் அருள்சாமி, மத்திய மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் விக்னேஸ்வரன், பரீட்சை திணைக்கள உதவி ஆணையாளர் விஸ்வநாதன், உதவி கல்விப் பணிப்பாளர் முத்துக்குமாரன், உதவி கல்விப் பணிப்பாளர் நீதிராசா, தமிழ் வர்த்தக சங்கத்தின் தலைவர் அன்பழகன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

