கல்முனை மாநகர எல்லைக்குள் பொதுமக்களுக்கு பெரும் சிரமங்களை ஏற்படுத்தும் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் மாநகர சபை உடனடி நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, பாதைகள், சந்தைகள், விளையாட்டு மைதானங்கள் போன்ற இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள கட்டாக்காலி மாடுகள் கடந்த மூன்று நாட்களாக கல்முனை மாநகர சபையினரால் மீட்கப்பட்டு, மாநகர சபைக்கு சொந்தமான காணியினுள் அடைத்து வைக்கப்பட்டுள்ளன.
அத்துடன் அவை தொடர்பிலான விபரங்கள் மாடுகளின் உரிமையாளர்களுக்கு பள்ளிவாசல் ஒலிபெருக்கி மற்றும் ஊடகங்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.

எனினும், மாநகர சபையின் பராமரிப்பில் தமது மாடுகள் இருப்பதை அறிந்தும், அவற்றின் உரிமையாளர்கள் தங்கள் மாடுகளை மீட்டெடுக்காமல் இருப்பதாக கூறப்படுகிறது.
கால்நடைகளை பராமரிப்பதில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு, மாநகர சபையின் உத்தியோகத்தர், ஊழியர்களது ஒத்துழைப்பு, உதவிகளோடு கால்நடைகளை வளர்க்க எதிர்பார்த்து இவ்வாறு கால்நடை உரிமையாளர்கள் தங்கள் மாடுகளை கொண்டு செல்ல முன்வராதுள்ளனர் என்பது நிரூபிக்கப்படுமாயின், குறித்த நபர்களுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு கால்நடைகளை பராமரிப்பதில் அனுபவம் வாய்ந்த தினக்கூலி பெறும் வேலையாட்களையும் மாநகர சபை நியமிக்கவுள்ளது.

மேலும், கால்நடைகளில் இடப்பட்டுள்ள குறிகள், அங்க அடையாளங்களை வைத்து உரிமையாளரை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கட்டாக்காலிகளை கைப்பற்றி, உரிமையாளர்களிடம் தண்டப்பணம் அறவிட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர சபைகள் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 84இன் கீழ் கல்முனை மாநகர சபையினால் அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.
இந்த அறிவித்தலை உடனடியாக அமுல்படுத்துமாறு சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவசர பணிப்புரை விடுத்ததை தொடர்ந்து கல்முனை மாநகர முதல்வர், ஆணையாளர், பொறியியலாளர் மற்றும் சுகாதார பிரிவு மேற்பார்வையாளர், மாநகரசபை ஊழியர்களின் ஒன்றிணைந்த நடவடிக்கையாக கட்டாக்காலி மாடுகள் கைப்பற்றப்பட்டு உரிமையாளர்களிடம் சேர்க்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


