வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து கடந்த செப்டம்பர் மாதம் 25 ஆம் திகதி ஆழ்கடலுக்குச் சென்ற நான்கு மீனவர்கள் தொடர்பான எவ்வித தகவல்களும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை கிடைக்கவில்லை என்று வாழைச்சேனை ஆழ்கடல் மீனவர் சங்க உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
இவ்விடயம் தொடர்பாக காணாமல் போன மீனவர்களின் குடும்பத்தினரை சந்திக்கச் சென்ற போது அவர்கள் தங்களது மனக்குமுறல்களை எம்மிடம் கண்ணீருடன் பகிர்ந்து கொண்டனர்.
“எங்கள் வாப்பாவுக்கு 63 வயசு அவர் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக கடற்றொழிலில் ஈடுபட்டு வருகிறார். அவரது கடல் தொழில் பயணத்தில் கடலில் காணாமல் போனது இதுதான் முதல் தடவையாகவுள்ளது.
அவருக்கு வயது சென்றாலும் தொழில் செய்து சாப்பிட வேண்டும் என்றுதான் இதுவரைக்கும் தொழிலை விடாமல் செய்து வந்தார். இவ்வாறு தொழிலுக்கு சென்ற எனது தந்தை, சகோதரன் உட்பட நான்கு மீனவர்களும் இது வரை வீடு வரவில்லை.

இர்ஷாத்
அவர்கள் எங்கேயாவது இருக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்தால் மாத்திரமே எங்களுக்கு போதும். அவர்களை மீட்டு எடுப்பதற்கு எங்களிடம் இருக்கின்ற ஒரேஒரு வீட்டை விற்பனை செய்தாவது நாங்கள் அவர்களை மீட்டு எடுப்போம்.
காணாமல் போனவர்களை தேடும் பணிகள் மந்தகதியில் காணப்படுகிறன. அவர்களை தேடிச் சென்றால் கூட எங்களுக்கு மன ஆறுதல் கிடைக்கும் ஆனால் இதில் சம்பத்தப்பட்ட தரப்பினர் அசமந்தப்போக்குடன் உள்ளார்கள்.
எங்களால் முடிந்த முயற்சிகளை நாங்கள் எடுத்துள்ளோம்” என்று காணாமல் போன 63 வயதுடைய உமர்தீன் அசன் அலி என்பவரின் மகன் முஜாஹித் எம்மிடம் கூறினார்.
“எனது தந்தை நிச்சியம் வருவார் என்ற நம்பிக்கையோடு தான் நான் இருந்து வருகிறேன். எனக்கு எதுவும் வேண்டாம். எனது தந்தை எனக்கு வேண்டும். அவர் மீண்டும் எங்களிடம் வர வேண்டும் என்று நான் தொழுது கொண்டு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து வருகிறேன்.
எனது தந்தையின் நினைவால் அவரின் ரீ சேர்ட்டை அணைத்தவாறே நான் தூக்கத்துக்குச் செல்கின்றேன்” என்று காணாமல் போன 34 வயதுடைய முகாஜித் என்பவரின் 12 வயதுடைய மகள் சுஜானா கண்ணீருடன் கூறினார்.
“கடலுக்குச் சென்ற எனது கணவர் சுமார் 47 நாட்கள் கடந்தும் வீடுவரவில்லை. அதனால் நான் மிக மனவேதனையுடன் வாழ்ந்து வருகிறேன். எங்களுக்கு 11 வயதில் ஆண் பிள்ளை ஒன்றும், 5 வயதில் பெண் பிள்ளை ஒன்றும் உள்ளனர். அவர்கள் பாதிப்படைந்து விடக்கூடாது என்பதற்காக வேண்டி எனது கவலைகளை அடக்கி வருகிறேன்.
வாப்பா எப்ப வருவார் என்று பிள்ளைகள் ஒவ்வொரு நாளும் கேட்கின்றனர். வரும்போது சொக்லட் வாங்கி வருவாறா? என்று அந்த பிஞ்சு உள்ளங்கள் கேட்கின்றன.

றிஸ்வி
காணாமல் போயுள்ள எனது கணவர் உட்பட நான்கு மீனவர்களும் வீடு வர வேண்டும். தரைவழியில் அவர்கள் காணாமல் போயிருந்தால் நாங்கள் அவர்களை கண்டுபிடிக்க தேடிச் சென்றிருப்போம். அவர்கள் கடலில் காணாமல் போயுள்ளதால் நாங்கள் கரையில் தவிக்கிறோம்.
இதுவரைக்கும் அவர்கள் இருக்கிறார்களா? இல்லையா? என்பது பற்றி எங்களுக்கு தெரியாது. பிறர்களின் உதவிகளில் நாங்கள் எத்தனை நாட்களுக்கு சாப்பிடப் போகிறோம். எங்களுக்கு எதுவுமே வேண்டாம். காணாமல் போனவர்கள் வீடு வந்தால் மாத்திரமே போதும். தேடும் நடவடிக்கையில் முயற்சி காணாமல் இருக்கிறது.
தேர்தல் காலங்களில் மாத்திரம் வீடுவீடாக சென்று வாக்குக் கேட்டு எம்.பிகளாக ஆகுகின்றனர். இவ்வாறான பிரச்சினைகள் வந்தால் அவர்கள் எங்களை எட்டிக்கூட பார்ப்பதில்லை. எங்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் அவர்கள் எங்களை பார்க்கத்தானே வேண்டும். அவர்கள்தான் அரசாங்கத்துடன் பேசி மீனவர்களை கண்டுபிடித்து தர வேண்டும்” என்று காணாமல் போன 34 வயதுடைய எம்.எச்.எம்.றிஸ்வி என்பவரின் மனைவி ஏ.ஜீ.நிசாயா கூறினார்.

முகாஜித்
“எங்களுக்கு எதுவும் வேண்டாம். உங்களிடம் நாங்கள் அல்லாஹுக்காக கெஞ்சிக் கேட்கிறோம். காணாமல் போன எனது மகன் உட்பட நான்கு ஏழை மீனவர்களையும் கண்டுபிடித்துத் தாருங்கள்” என்று காணாமல் போன 32 வயதுடைய பீ.எம்.இர்ஷாத் என்பவரின் தாயார் அழுது புலம்பினார்.
ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் பயணம் செய்து மீன்பிடிக்கச் சென்ற நான்கு மீனவர்களும் 47 நாட்களாகியும் இதுவரை வீடு திரும்பவில்லை. மீனவர்கள் 200 கிலோ மீற்றர் தூரம் பயணம் செய்யதற்காக வேண்டியே அவர்களுக்கான உணவுகள் மற்றும் எரிபொருட்களை கொண்டு சென்றுள்ளனர்.
இவ்வாறு கடலுக்குச் சென்று காணாமல் போயுள்ள மீனவர்களை கண்டுபிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடுதல் கவனமெடுக்க வேண்டும் என்பதுடன், நான்கு மீனவர்களும் எந்தவித ஆபத்துகளுமின்றி வீடு வந்து சேர வேண்டும் என்று பிரார்த்திக்கின்றோம்.

அசன் அலி

