புலனாய்வு பிரிவினர் தொடர்பில் அதிருப்தி நிலை!

172 0

நாட்டின் புலனாய்வு பிரிவினர் தொடர்பில் அதிருப்தி நிலை காணப்படுகிறது. இவர்கள் யுத்த காலத்தில் இருந்திருந்தால் பிரபாகரனால் நாங்கள் இன்று தடுத்து வைக்கப்பட்டிருப்போம்.

ஜனநாயகத்திற்கு எதிரான அரசாங்கத்தின் அடக்குமுறை நிறைவு பெறும் வரை இலங்கைக்கு எவரும் ஒரு டொலர் கூட அனுப்ப கூடாது என்பதை மீண்டும் வலியுறுத்துவேன் என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (10) இடம்பெற்ற நஞ்சுகள்,அபின் மற்றும் அபாயகரமான ஒளடதங்கள் (திருத்தச்) சட்டமூலம் உட்பட பல சட்டமூலங்களின் இரண்டாம் மதிப்பீட்டின் போது விசேட உரையாற்றுகையிலேயே அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

இராணுவ தளபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்றதை தொடர்ந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டேன், பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எனக்கு எதிராக முன்வைக்கப்பட்டன.

30 மாதங்கள் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தேன். எனக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்து, அனைத்து செயற்பாடுகளையும் அப்போதைய அரச தலைவரே முன்னெடுத்தார்.

விலைமனுகோரலுடன் தொடர்புப்படவில்லை, ஆனால் விலைமனுகோரல் சபையில் உறுப்பினராக இருந்த காரணத்தினால் 30 மாத காலம் சிறைக்கு சென்றேன். இவ்வாறு தண்டிக்க வேண்டுமாயின் பல அரசியல்வாதிகள் தற்போது சிறையில் இருக்க வேண்டும்.

சுயாதீன ஆணைக்குழுக்களினால் நாட்டு மக்களுக்கு எவ்வித பயனும் கிடைக்கபோவதில்லை. துறைகளில் காணப்படும் ஊழல் மோசடிகளை இல்லாதொழித்ததால் மாத்திரமே ஆணைக்குழுக்களினால் நாட்டு மக்கள் பயன்பெற முடியும்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக ஒன்றியத்தின் தலைவர் வசந்த முதலிகேவை பார்ப்பதற்கு சென்றேன்.

தங்காலைக்கு சென்ற போது கொழும்பு பயங்கரவாத விசாரணை பிரிவிற்கு  அழைத்து சென்றுள்ளதாக குறிப்பிட்டார்கள். வசந்த முதலிகேவை கொழும்புக்கு அழைத்து சென்றமை தொடர்பில் எவரும் அறியவில்லை.

நாட்டில் பயங்கரவாதம் உள்ளதா, வசந்த முதலிகே பயங்கரவாதியா என கொழும்பு பயங்கரவாத விசாரணை பிரிவின் அதிகாரியிடம் வினவிய போது, பயங்கரவாதம் தொடர்பில் விசாரணை செய்வதற்காகவே வசந்த முதலிகே தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என அதிகாரி குறிப்பிட்டார்.

 

Sarath Fonseka: 'Sumanthiran always spoke against terrorists' – Ceylonmirror.net

இவ்வாறான நிலை காணப்படுமாயின் புலனாய்வு பிரிவு எதற்கு. தற்போதைய புலனாய்வு பிரிவினர் நல்ல வேளை யுத்த காலத்தில் இருக்கவில்லை.

அவ்வாறு இருந்திருந்தால் நாங்கள் பிரபாகரனின் தடுப்பு காவலில் இருந்திருப்போம். வசந்த முதலிகே,உட்பட மத குருவும்  நோய்வாய்ப்பட்டுள்ளார். இவ்விருவரின் உயிருக்கு ஏதும் பாதிப்பு ஏற்பட்டால் அரசாங்கம் பாரிய விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்.

ஜனநாயகத்திற்கு எதிரான அடக்குமுறைiயை அரசாங்கம் நிறுத்தும் வரை அரசாங்கத்திற்கு நாட்டு மக்கள் ஒத்துழைப்பு வழங்க கூடாது என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்.

மனித உரிமைக்கு அரசாங்கம் மதிப்பளித்தால் ஒத்துழைப்பு வழங்க தயார். ஜனநாயகத்திற்கு அமைய அரசாங்கம் செயற்படும் வரை ஒரு டொலர் கூட சர்வதேசத்தில் வாழ்பவர்கள் இலங்கைக்கு அனுப்ப கூடாது என்பதையும் வலியுறுத்துகிறேன்.

போராட்டம் நடத்த வேண்டாம், நாடு பாதிக்கப்படும் என குறிப்பிடும் தொழிற்துறை தரப்பினர்கள் அரசியல்வாதிகளின் ஊழலுக்கு எதிராகவும் குரல் கொடுக்க வேண்டும். அரசாங்கத்துடன் ஒன்றிணை வேண்டிய தேவை எனக்கு கிடையாது என்றார்.