முச்சக்கரவண்டி விபத்து – ஒருவர் உயிரிழப்பு – மூவர் படுங்காயம் – சாரதி கைது

348 0

கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பேதலாவ கதிரேகொட பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று மண்மேட்டில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் படுங்காயம்பட்டு கினிகத்தேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து இன்று அதிகாலை 1.30 மணியளவில் கினிகத்தேனை – அம்பேதலாவ பிரதான வீதியில் கதிரேகொட பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கதிரேகொட பகுதியில் மரண சடங்கு வீட்டு ஒன்றுக்கு சென்று மீண்டும் தெஹிகஸ்தென்ன பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு செல்லும் வழியில் முச்சக்கரவண்டி கினிகத்தேனை – அம்பேதலாவ பிரதான வீதியில் கதிரேகொட பகுதியில் மண்மேடு ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த முச்சக்கரவண்டியில் சாரதி உட்பட ஐந்து பேர் பயணித்துள்ளதாகவும், இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், படுங்காயம்பட்டு கினிகத்தேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூன்று பேரில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அத்தோடு சாரதி சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளார்.

 

முச்சக்கரவண்டி சாரதி மதுபானம் அருந்திவிட்டு முச்சக்கரவண்டியை செலுத்தியதினாலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

எனினும் முச்சக்கரவண்டி சாரதியை கினிகத்தேனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவ்விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.