குவைத்தில் 6 இலங்கையர்களுக்கு மரண தண்டனை

239 0

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் 6 பேர் குவைத் மத்திய சிறையில் சிறை வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத்துக்கான இலங்கை தூதுவர் சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போது இந்த தகவலை வெளியிட்டார்.

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 6 பேர் மீது போதைப்பொருள் மற்றும் கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட நபர்களின் உறவினர்கள் இரத்த பணம் பெற்றுக் கொள்ள விருப்பம் வெளியிட்டால் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை பெற்றுக் கொள்ள முடியும், எனினும் போதைப்பொருள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு அவ்வாறான மன்னிப்பை பெற்றுக் கொள்ள முடியாதென தூதுவர் தெரிவித்துள்ளார்.

கொலை குற்றச்சாட்டு தொடர்பில் சில காலங்களுக்கு முன்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கையர் ஒருவருக்காக தூதுவர் அலுவலகம் ஊடாக பணம் சேகரிக்கப்பட்டு இரத்த பணம் வழங்கி மன்னிப்பு பெற்றுக் கொள்வதற்காக ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டது. இது தொடர்பிலான மேலதிக நடவடிக்கைகள் இலங்கை சட்டத்திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

குவைத் அரசாங்கம் கடந்த 2013ஆம் ஆண்டில் இருந்து 2016ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியினுள் மரண தண்டனை நிறைவேற்றுவதனை தற்காலிகமாக இடைநிறுத்தியிருந்த போதிலும், இந்த வருடத்தில் இருந்த சட்டம் அமுல்படுத்தப்படுகிறது.

அதற்கமைய அண்மையில் குவைத் அரச குடும்பத்தின் உறுப்பினர்கள் உட்பட 7 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தூதுவர் மேலும் தெரிவித்துள்ளார்.