தேசிய சிறுவர் பாதுகாப்பு கொள்கையை ஏன் அமுல்படுத்தவில்லை

112 0

நாட்டில் நாளுக்கு நாள்   சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் தேசிய சிறுவர் பாதுகாப்புக் கொள்கையை ஏன்  அமுல்படுத்தாமல் இரு்கின்றது.

அத்துடன்  இலங்கையில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் அமைப்பு சிவப்பு எச்சரிக்கை வெளியிட்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (08) நிலையியற் கட்டளை 27இன் 2 கீழ் கேள்வியின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் இந்நாட்டில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் நாம் மிகவும் அக்கறையுடன் செயற்பட வேண்டும் என்பதை எமக்கு எடுத்துக் காட்டுகின்றது. அத்துடன், இந்நாட்டில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் அமைப்பும் சிவப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக சிறுவர் துஷ்பிரயோகம் உட்பட அனைத்து துஷ்பிரயோகங்களில் இருந்தும் இந்நாட்டு சிறுவர்களை பாதுகாத்து அவர்களுக்கு பாதுகாப்பான நாளைய எதிர்காலத்தை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் அனைத்து தரப்பினருடனும் இணைந்து செயற்பட வேண்டிய தேவையுள்ளது.

இதன் பிரகாரம்,இதனை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாகக் கருதி,பின்வரும் கேள்விகளுக்கு அரசாங்கத்திடமிருந்து குறிப்பிட்ட பதில்களையும் விளக்கங்களையும் எதிர்பார்க்கிறேன்.

கடந்த 10 ஆண்டுகளில்,18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகம்,பாலியல் பலாத்காரம்,கொடுமை போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக தேசிய சிறுவர்  பாதுகாப்பு அதிகார சபைக்கு எத்தனை முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? அந்த முறைப்பாடுகள் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை எவ்வாறு செயற்பட்டது என்பது குறித்தும்,குறிப்பாக பெறப்பட்ட தண்டனைத் தீர்ப்புகள் தொடர்பான தகவல்கள் தொடர்பான விரிவான அறிக்கையை இந்த  சபைக்கு சமர்ப்பிக்க முடியுமா? சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டம், செயல்முறையில் அரசாங்கம் திருப்தியடைகிறதா?

மேலும் சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தடுப்பதற்கும்,அத்தகைய துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைப் பாதுகாப்பதற்கும், சிகிச்சையளிப்பதற்கும் ஒரு தேசியக் கொள்கையை உருவாக்கும் நோக்கத்திற்காக 1998 ஆம் ஆண்டின் 50 ஆம் இலக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை சட்டம் மூலம் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அந்தச் சட்ட அடிப்படையில் தேசிய சிறுவர் பாதுகாப்புக் கொள்கை நிறுவப்பட்டுள்ளதா?அவ்வாறில்லை என்றால்,தேசிய சிறுவர் பாதுகாப்புக் கொள்கையை ஏன் விரைவில் அமுல்படுத்தக் கூடாது?

சிறுவர்கள் மற்றும் நியாய சீர்திருத்த சட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் சமர்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.அதன் தற்போதைய முன்னேற்றம் யாது? அதனை எப்போது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்க்கப்படுகிறது?

2021 பெப்ரவரியில்,சிறுவர்களுக்கு உடல் ரீதியான தண்டனையை நிறுத்துவதற்கான தீர்ப்பை உயர் நீதிமன்றம் வழங்கியது. இந்த உயர் நீதிமன்ற தீர்ப்பை சிறுவர் நியாய நடைமுறையில் உள்ளடக்குவதற்கு அரசாங்கம் போதுமான அளவு ஈடுபாட்டை காண்பித்துள்ளதா? மேலும்,சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் குழு  பரிந்துரைத்தபடி, தண்டனைச் சட்டத்தின் 82, 341(i) மற்றும் 308(A) ஆகிய பிரிவுகளில் திருத்தம் செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா?

அத்துடன் பாதிக்கப்பட்ட பல சிறுவர்களின் மனித உரிமைகளை மீறியதாக குற்றஞ்சாட்டப்பட்ட நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவைகள் திணைக்களத்தின் அதிகாரிகள் மீண்டும் அதே பணியகத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இது உண்மையா?  அப்படியானால்,இந்நியமனம் எந்த அடிப்படையில் நியாயமானது?

மேலும் சர்வதேச பாடசாலைகளில் சிறுவர் துஷ்பிரயோகம் இடம்பெறும் பட்சத்தில் அரசிடமிருந்தோ அல்லது கல்வி அமைச்சிலிருந்தோ எவ்வித பாதுகாப்பும் வழங்கப்படுவதாக இல்லை என தெரிவிக்கப்படுகிறது.இது உண்மையா? இந்தப் பாடசாலைகளிலும் எமது நாட்டுப் பிள்ளைகளே கல்வி கற்கும் நிலையில்,கல்வி அமைச்சின் முறையான ஒழுங்குமுறைக்கு இப்பாடசாலைகள் ஏன் உட்படுத்தப்படவில்லை?. இந்த கேள்விகளுக்கு முறையாக பதிலை எதிர்பார்க்கின்றேன் என்றார்.