அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் அரசியலமைப்பு பேரவைக்கான உறுப்பினர்கள் மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான தலைவர், உறுப்பினர்கள் நியமனத்தை துரிதப்படுத்துமாறு நீதி ,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் செவ்வாய்க்கிழமை (08) இடம்பெற்ற கூட்டத்தொடரின் போது விசேட உரையாற்றுகையில் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
ஜனநாயகம்,சட்டவாட்சி கோட்பாடு ஆகியவற்றை ஸ்தாபிக்கும் வகையில் நாட்டு மக்களின் எதிர்பார்ப்பிற்கமைய அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
21ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற முழுமையாக ஒத்துழைப்பு வழங்கிய ஜனாதிபதி, பிரதமர் ,எதிர்க்கட்சி தலைவர் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் நாட்டு மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அரசியலமைப்பு பேரவைக்கான உறுப்பினர் நியமனத்தை துரிதப்படுத்த வேண்டும்,இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் முழுமையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.21ஆவது திருத்தத்தச் சட்டத்தின் நோக்கம் முழுமைப்படுத்தப்பட வேண்டும்.
அத்துடன் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான தலைவர் மற்றும் உறுப்பினர் நியமனமும் துரிதப்படுத்தப்பட வேண்டும்.இதற்கு அரசியல் கட்சி தலைவர்களின் ஒத்தழைப்பை முழுமையாக எதிர்பார்த்துள்ளேன்.21 ஆவது திருத்தத்தின் மீது நாட்டு மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.
ஆகவே நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை பாராளுமன்றத்தின் ஊடாக நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு அனைத்து உறுப்பினர்களுக்கும் உண்டு என்றார்.

