மக்களுக்கு நன்மை பயக்ககூடியதெனில் அதற்கு ஆதரவாக வாக்களிப்போம்

264 0
2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்ட பின்னர் அதன் உள்ளடக்கங்கள் தொடர்பில் ஆராயப்படும். மக்களுக்கு நன்மை பயக்ககூடியதெனில் அதற்கு ஆதரவாக வாக்களிப்போம் என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

கலாச்சார அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட நுவரெலியா – கந்தபளை எஸ்க்கடேல் தோட்டத்திற்கான ஆறுமுகம் தொண்டமான் கலாச்சார மண்டபம் இன்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 2023 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் எதிர்வரும் 14 ஆம் திகதி முன்வைக்கப்படவுள்ளது. அதை யார் முன்வைக்கின்றார் என்பது முக்கியம் அல்ல. அதில் உள்ள விடயங்கள்தான் பிரதானம். அந்தவகையில் பாதீட்டின் உள்ளடக்கங்கள் தொடர்பில் முதலில் ஆராயப்படும். அதில் மக்களுக்கு நன்மை பயக்ககூடிய விடயம் இருந்தால் நிச்சயம் ஆதரிப்போம். ஏனைய கட்சிகளும் ஆதரிக்க வேண்டும் என கோரிக்கை விடுப்போம்.

அதேவேளை, பதுளையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தோட்டத் தொழிலாளியின் குடும்பத்துக்கு இழப்பீடாக 40 லட்சம் ரூபாவை பெற்றுக்கொடுத்தோம்.

அதேபோல டயகம கிழக்கு பிரிவிலும் மின்சாரம் தாக்கி தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். எனினும், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது எனக்கூறி மறைப்பதற்கு தோட்ட நிர்வாகம் முயற்சித்தது. அதற்கு நாம் இடமளிக்கவில்லை.

தொழிலாளர்கள் மத்தியில் ஒற்றுமை இல்லாததால்தான் தோட்ட நிர்வாகத்துக்கு துணிவு பிறக்கின்றது. பதுளை விவகாரத்தில் நாம் போராடும்போது, சில தொழிலாளர்கள் வேலைக்குச்சென்றனர். காட்டிக்கொடுப்பு இடம்பெற்றது. அவங்க குடும்பத்துக்குதானே நடந்தது, நமக்கு ஏன் என இருந்துவிடக்கூடாது. நாளை அந்த சம்பவம் நமது குடும்பத்துக்கும் நடக்கும். எனவே, தொழிலாளர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றார்.