குரங்கம்மை நோய் ; வீண் அச்சம் வேண்டாம் – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்

194 0

குரங்கம்மை நோய்க்கு உள்ளான ஒருவருடன் மிக நெருங்கிய தொடர்பைப் பேணியவர்களுக்கு மாத்திரமே அந்நோய் ஏற்படும். எனவே இலங்கையில் குரங்கம்மை நோயாளர் இனங்காணப்பட்டுள்ளமை தொடர்பில் மக்கள் வீண் அச்சமடையத் தேவையில்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

இலங்கையில் முதலாவது குரங்கம்மை நோயாளர் நேற்று வெள்ளிக்கிழமை இனங்காணப்பட்ட நிலையில் , அது தொடர்பில் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

‘இலங்கையில் நோய்க் கட்டுப்பாட்டு முறை முறையாக அமுல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே தான் நோய்க்குள்ளான நபரை விரைவாக அடையாளம் காண முடிந்தது. மேலும், குரங்கம்மை நோய் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு நெருங்கிய தொடர்பு மூலம் மட்டுமே பரவும். அது பல்வேறு வழிகளில் ஏற்படலாம்.

இந்த நோய் சிக்குன் குனியா போன்றதாகும். இவ்வாறான வைரஸ் பாதிப்புகள் அவ்வப்போது ஏற்படும். எனினும், இந்நோய் தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். தேவையான சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு சுகாதார நிறுவனங்களின் தலைவர்களுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. சந்தேகத்திற்கிடமான நோயாளிகளை சுகாதார திணைக்களம் உன்னிப்பாக கவனித்து வருகிறது.

நாட்டில் குரங்கம்மை நோய்க்கு உள்ளான நபருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதோடு , அவருடன் நெருங்கிய தொடர்பினை பேணியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இது எவ்விதத்தில் அச்சப்பட வேண்டிய நிலைமை அல்ல.

இந்நோயை இனங்காண்பதற்கு முன்னெடுக்க வேண்டிய பரிசோதனைகளுக்கான சகல வசதிகளும் மற்றும் சிகிச்சைகளுக்கான மருந்துகளும் நாட்டில் உள்ளன. எனவே பிரதேசங்களைத் தனிமைப்படுத்தல் , விமான நிலையத்தை மூடுதல் மற்றும் பொது இடங்களை மூடுதல் என்பது அவசியமற்றவையாகும்.

கடந்த மே மாதம் இந்நோய் பரவல் உலகில் பரவ ஆரம்பித்தது. ஐரோப்பிய மற்றும் ஏனைய நாடுகளில் தீவிரமாகப் பரவலடைந்து தற்போது குறைவடைந்துள்ளது. தென்னாசிய நாடுகளில் இதுவரையில் 23 நோயாளர்கள் மாத்திரமே இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் மாத்திரமே உயிரிழந்துள்ளார். உலகலாவிய ரீதியில் 7, 434 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதோடு , அவர்களில் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.’ என்றார்.