மீரியபெத்த மக்களின் தற்போதைய நிலை!

165 0

பதுளை, மீரியபெத்த மண்சரிவு அனர்த்தம் இடம்பெற்று 08 வருடங்களுக்கு மேலாகியும், அதிக ஆபத்துள்ள பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதியில் வசிக்கும் 134 குடும்பங்களை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இப்பகுதி நிலச்சரிவு அபாயம் அதிகம் உள்ள பகுதியாக 12 ஆண்டுகளுக்கு முன்பு அடையாளம் காணப்பட்டது.

இதனால் அப்பகுதிக்கு மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான பின்னணியில் அங்கு வாழும் குடும்பங்களுக்கு உரிய காணிகளை வழங்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இவ்வாறான நிலையில் அந்தப் பிரதேசத்தில் வாழும் பெருந்தோட்ட மக்களின் உயிருக்கு பாரிய அச்சுறுத்தல் காணப்படுவதாக பெருந்தோட்ட மத்திய நிலையத்தின் ஏற்பாட்டுச் செயலாளர் ஸ்ரீ வசந்த தெரிவித்தார்.

இது தொடர்பில் ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் கே.எல்.ஜே.பிரியங்கிகாவிடம் “அத தெரண” வினவியது.

மஸ்கெலியா தோட்ட நிறுவனத்திற்கு சொந்தமான அம்பிட்டிய தோட்டத்தில் இருந்து அவர்களுக்கு தேவையான காணிகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இப்பகுதி மக்கள் வாழ்வதற்கு ஏற்றது என கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்திடம் இருந்து அறிக்கைகள் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும், அந்த காணிகளில் வீடுகளை நிர்மாணிப்பதற்கு ஒதுக்கீடுகள் கோரப்பட்ட போதிலும் இதுவரையில் அனுமதி வழங்கப்படவில்லை என ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் கே.எல்.ஜே. பிரியங்கிகா சுட்டிக்காட்டினார்.