புதிய கல்விப் புரட்சியின் தேவைப்பாட்டை உணர்த்தும் சஜித்!

187 0

கல்வியை முன்னேற்றுவதற்கு நாடு பூராகவுமுள்ள பாடசாலை கட்டமைப்பு முறைமை அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் எனவும், புதிய தொழில்நுட்பத்திற்கு ஏற்ற வளங்களைக் கொண்டு அந்தப் பாடசாலைகள் பூரணப்படுத்தப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

நகர்புறங்கள் என்றால் ஒருவிதமாகவும் கிராமப்புறங்கள் என்றால் மற்றுமொரு விதமான கருத்து நிலவுவதாகவும் ஆனால் அதனை முற்றாக மாற்றியமைத்து புதிய கல்விப் புரட்சியை உருவாக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாட்டின் உயிர் நாடியாக கருதப்படும் சிறுவர் தலைமுறையை அறிவு, திறமை மற்றும் வசதிகளுடன் பூரணப்படுத்துவது தார்மீக பொறுப்பு என்று நம்பி அதற்கான நிலையான நோக்கை முன்நோக்காக கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் எண்ணக்கருவுக்கு அமைய நடைமுறைப்படுத்தப்படும் சக்வல (பிரபஞ்சம்) வேலைத்திட்டத்தின் கீழ் 40 ஆவது பாடசாலை பஸ் நேற்று (03) அனுராதபுரம் வலிசிங்க ஹரிச்சந்திர கல்லூரிக்கு அன்பளிப்பு செய்யப்பட்டது.

பாடசாலைக்கு வரும் பிள்ளைகள் மயக்கமடைந்து விழும் நிலை ஏற்ப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் எதிர்கால சந்ததி எவ்வாறு ஆற்றல் மிக்கதாக இருக்கும் என கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர், எதிர்கால அரசில் அனைத்துப் பாடசாலை குழந்தைகளுக்கும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

ஆட்சி அதிகாரம் இல்லாவிட்டாலும் இந்த குறுகிய காலத்தில் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதை ஐக்கிய மக்கள் சக்தி காட்டியுள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், “மூச்சு” மற்றும் “பிரபஞ்சம்” மூலம் பாரியளவிலான சேவைகளைச் செய்ய முடிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.