தபால் மூலம் அனுப்பப்பட்ட போதை மாத்திரைகள்

55 0

வெளிநாட்டிலிருந்து தபால் மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்ட 2,387 கிராம் நிறையுடைய 4,956 போதை மாத்திரைகள் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் தபால் மதிப்பீட்டுப் பிரிவினால் கைப்பட்டப்பட்டுள்ளது.

தபால் மதிப்பீட்டுப் பிரிவில் கடமையாற்றும், வெளிநாட்டிலிருந்து தபால் மூலம் இலங்கைக்கு அனுப்பப்படும் பொதிகளை பரிசோதிக்கும் உதவி சுங்க அத்தியட்சகருக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் வெளிநாட்டு தபால் பொதி ஒன்று விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

குறிப்பிட்ட இந்த பொதி கார்ட்போட் பெட்டியொன்றில் பொதியிடப்பட்டிருந்தது. அப்பொதி ஜேர்மனியில் இருந்து அங்கொட பிரதேசத்தில் வசிக்கும் ஒருவருக்கு அனுப்பப்பட்டிருந்தது. இதில் தனிப்பட்ட பொருட்கள் அடங்கியிருப்பதாக பொதி தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை சோதனையிட்ட போது கார்ட்போர்ட் பெட்டியில் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மெத்தபெட்டமின் எனப்படும் போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் பரிசோதித்ததன் பின்னர், அவற்றின் சந்தைப் பெறுமதி 49.56 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக குறித்த போதை மாத்திரைகள் இலங்கை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.