ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைப் பெறுவதற்கு இலங்கை வலுவான முன்னேற்றம் காண்பது அவசியம்

303 0

பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் மீள்பிரயோகம் குறித்து கரிசனையை வெளிப்படுத்தியுள்ள ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகள், ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை தொடர்பான கண்காணிப்புப்பொறிமுறை மற்றும் அதில் உள்ளடங்கும் விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தியிருப்பதுடன் அவ்வரிச்சலுகையைப் பெற்றுக்கொள்வதற்கு இலங்கை பூர்த்திசெய்யவேண்டிய கடப்பாட்டில் வலுவான முன்னேற்றம் அடையப்படவேண்டியது அவசியம் என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.

அரச நிர்வாகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமைகள் தொடர்பான ஐரோப்பிய ஒன்றிய மற்றும் இலங்கை செயற்பாட்டுக்குழுவின் 6 ஆவது கூட்டம் கடந்த 28 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்றது. இதன்போதே மேற்குறிப்பிட்ட விடயம் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில் இடம்பெறும் வழமையான இருதரப்புக் கலந்துரையாடல்களின் தொடர்ச்சியாகவே இக்கூட்டம் நடைபெற்றதுடன் இதன்போது இருதரப்பினதும் அனுபவங்கள் மற்றும் கருத்துக்கள் என்பன பரிமாற்றிக்கொள்ளப்பட்டன.

மேலும் இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அண்மையகால நிலைவரம் குறித்தும், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் முன்னெடுக்கப்பட்டுள்ள பொருத்தமானதும் சட்டரீதியானதுமான நடவடிக்கைகள் குறித்தும் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதுடன் நல்லிணக்க செயன்முறையில் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பில் இலங்கையின் பிரதிநிதிகளால் விளக்கமளிக்கப்பட்டது.

அதனையடுத்து தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து வெற்றிகரமாக மீள்வதை முன்னிறுத்தி இலங்கை மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்குத் தாம் ஆதரவளிப்பதாக உறுதியளித்த ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகள், இந்நெருக்கடியின் தாக்கத்தைக் குறைத்து நாட்டை நிறைபேறான வளர்ச்சிப்பாதையில் கொண்டுசெல்வதற்கு அவசியமான மறுசீரமைப்புக்கள் மற்றும் சமூகப்பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் ஒத்துழைப்பு வழங்கத்தயாராக இருப்பதாகத் தெரிவித்தனர்.

அத்தோடு நீதி மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றின் ஊடாக அடையப்படும் சமூக, பொருளாதார, அரசியல் ஒன்றிணைவு மனித உரிமைகளின் மேம்பாட்டுக்கு அவசியம் என்பதை இருதரப்பினரும் ஏற்றுக்கொண்டனர்.

மேலும் அரசியலமைப்புப்பேரவையையும் சுயாதீன ஆணைக்குழுக்களையும் மீண்டும் ஸ்தாபிப்பதன் ஊடாக ஜனநாயக ஆட்சியையும், முக்கிய கட்டமைப்புக்கள் மீதான சுயாதீன கண்காணிப்பையும், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளையும் வலுப்படுத்துவதை இலக்காகக்கொண்டு நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தம் தொடர்பில் இலங்கைப்பிரதிநிதிகள் ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகளிடம் எடுத்துரைத்தனர்.

அதன்படி அதிகாரப்பகிர்வு, சுயாதீன கட்டமைப்புக்களின் செயற்பாடு என்பவற்றின் அவசியத்தை இருதரப்பினரும் அங்கீகரித்தனர். அதனைத்தொடர்ந்து தேர்தல் முறைமை மாற்றச்செயன்முறை குறித்துக் கலந்துரையாடப்பட்டதுடன் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான ஜனநாயக சுதந்திரம் மற்றும் அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமை ஆகியவற்றின் முக்கியத்துவம் தொடர்பில் மீளவலியுறுத்தப்பட்டது.

அதேவேளை ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்டுவரும் நீதித்துறைசார் மறுசீரமைப்புக்கள் தொடர்பில் இதன்போது ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகள் தமது பாராட்டை வெளிப்படுத்தினர்.

அடுத்ததாக கடந்த மார்ச் மாதமளவில் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை மறுசீரமைப்பதற்கு இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளை அங்கீகரித்த ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகள், இருப்பினும் ஏற்கனவே உள்ள கடப்பாடுகளின் பிரகாரம் மேலும் முன்னெடுக்கப்படவேண்டியுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் நினைவுறுத்தினர். அதுமாத்திரமன்றி பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் அண்மையகாலப் பிரயோகம் குறித்தும் அவர்கள் தமது கரிசனையை வெளிப்படுத்தினர். அதற்குப் பதிலளித்த இலங்கைப் பிரதிநிதிகள் அதியுச்ச அவசியத்தேவை காணப்பட்டபோது மாத்திரமே பயங்கரவாதத்தடைச்சட்டம் பயன்படுத்தப்பட்டது என உறுதியளித்தனர்.

மேலும் எவ்வித குற்றச்சாட்டுக்களுமின்றி பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டிருப்போர் விடுவிக்கப்படுவதை ஊக்குவித்த ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகளுக்குப் பதிலளித்த இலங்கைப்பிரதிநிதிகள், பயங்கரவாதத்தடைச்சட்டத்திற்கு மாற்றீடாக நாட்டின் அரசியலமைப்பிற்கும் சர்வதேச நியமங்களுக்கும் ஏற்றவாறான சட்ட முன்மொழிவொன்றைத் தயாரிப்பதற்கும் அதனை 2023 ஆம் ஆண்டில் இற்றைப்படுத்துவதற்குமான கடப்பாட்டை இலங்கை கொண்டிருப்பதாக எடுத்துரைத்தனர்.

சிவில் சமூக அமைப்புக்களுடன் ஒன்றிணைந்து செயலாற்றுதல் மற்றும் அவை இயங்குவதற்கான இடைவெளியை வழங்குவதன் அவசியம் குறித்து இதன்போது வலியுறுத்தப்பட்டதுடன், சிறுபான்மையினரின் நிலை பற்றியும் வெறுப்புணர்வுப்பேச்சைக் கையாள்வதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது. அவற்றுக்கு மேலதிகமாக பெண்கள், சிறுவர்கள் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் சிறுவர்கள் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதை முடிவிற்குக்கொண்டுவருவதற்கும் முன்னெடுக்கப்பட்டுள்ள சட்டரீதியான நடவடிக்கைகள் பற்றியும் ஆராயப்பட்டது.

மேலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருதரப்பினரும் ஒத்துழைப்புடன் செயலாற்றுவது குறித்துப் பேசப்பட்டதுடன் மனித உரிமைகள் பேரவையுடனும், அதன் பொறிமுறையுடனும் தொடர்ந்து ஒன்றிணைந்து பணியாற்றுமாறு ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையை வலியுறுத்தியது.

அதுமாத்திரமன்றி ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை தொடர்பான கண்காணிப்புப்பொறிமுறை மற்றும் அதற்கு அவசியமான காரணிகள் குறித்துத் தெளிவுபடுத்திய ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகள், அவ்வரிச்சலுகையைப் பெற்றுக்கொள்வதற்கு இலங்கை பூர்த்திசெய்யவேண்டிய கடப்பாட்டில் வலுவான முன்னேற்றம் அடையப்படவேண்டும் என்றும் சுட்டிக்காட்டினர்.