பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், இந்திய எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே நீலம் ஆற்றின் கரையில் சாரதா பீடம் கோயில் அமைந்துள்ளது. இது 51 சக்தி பீடங்களில் ஒன்றாகும்.
முதலாம் நூற்றாண்டை சேர்ந்த குஷாணப் பேரரசு காலத்தில் சாரதாபீடம் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. அங்கு பெரிய பல்கலைக்கழகம் ஒன்றும் செயல்பட்டது. அந்தக் காலத்தில் உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பண்டிதர்கள் சாரதா பீடத்துக்கு சென்று பல்வேறு பண்டிதர்களுடன் விவாதம் செய்வார்கள். அதில் வெற்றி பெறுபவர் சர்வக்ஞர் (எல்லா சாஸ்திரங்களிலும் வல்லவர்) என்று அழைக்கப்பட்டார்.
சர்வக்ஞர் பட்டம் பெற்றவர்களே சாரதா பீடத்தின் கருவறைக்கு சென்று தேவியை வழிபட முடியும். 7-ம் நூற்றாண்டை சேர்ந்த ஆதி சங்கரர், சாரதா பீடம் சென்று அனைவரையும் தனது வாதத் திறமையால் வென்று பீடத்தின் உள்ளே நுழைந்தார்.
அவர் உள்ளே சென்றபோது சரஸ்வதி தேவி அவரை சோதனை செய்தார். அந்த சோதனையிலும் ஆதி சங்கரர் வெற்றி பெற்றார். அவரது அறிவு, ஞானத்தை மெச்சி, தேவி அருளாசி வழங்கினார்.
தெய்வீக பெருமைமிக்க சாரதா பீடம் இப்போது சிதிலமடைந்த நிலையில் காணப்படுகிறது. எனினும் உள்ளூர் முஸ்லிம்கள் கோயிலை இன்றளவும் பாதுகாத்து வருகின்றனர்.
ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முசாபராபாத் பல்கலைக்கழக பேராசிரியர் ரக்சனா கான் கூறும்போது, “சாரதா பீடம் கோயில் அன்றைய நாகரிகத்தின் அடையாளம். இந்த கோயிலை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இதனை பாரம்பரிய சின்னமாக அறிவிக்க கோரிக்கை விடுத்திருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
இந்திய காஷ்மீர் பகுதியை சேர்ந்த சாரதா பீட பாதுகாப்பு கமிட்டியின் நிறுவனர் ரவீந்திர பண்டிட் கூறும்போது, “கோயிலை புதுப்பித்து மீண்டும் திறக்க வேண்டும். இந்த விவகாரத்தில் ஐ.நா. சபை தலையிட வேண்டும். இந்திய காஷ்மீர் பகுதியில் இருந்து சாரதா பீடத்துக்கு செல்ல வழித்தடம் அமைக்க வேண்டும். இந்திய பக்தர்கள் சாரதா பீடத்துக்கு செல்ல எளிதாக விசா கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
ஆக்கிரமிப்பு காஷ்மீரின் உச்சநீதிமன்றம் கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரியில் சாரதா பீடத்தை பாதுகாக்க அரசுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை உள்ளூர் நிர்வாகம் முறையாக பின்பற்றவில்லை. எனினும் உள்ளூர் முஸ்லிம்கள் சாரதா பீடத்தை பாதுகாத்து வருகின்றனர்.

