வேண்டுமென்றே சட்டையை கிழித்துவிட்டு குற்றம்சாட்டும் சபாநாயகர் – மு.க.ஸ்டாலின் பேட்டி

203 0

தமிழக சட்டசபையில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனது மெஜாரிட்டியை நிரூபிக்கும்வகையில், நம்பிக்கை தீர்மானத்தை முன்மொழிந்தார். ஆனால், ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தி.மு.க உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், அவர்கள் அனைவரும் அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.

பின்னர் வெளியே வந்த மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம்

ரகசிய வாக்கெடுப்பு நடத்தக்கோரி முழக்கங்கள் எழுப்பிய தி.மு.க. உறுப்பினர்கள் சபாநாயகரை முற்றுகையிட்டு கோஷமிட்டனர். இதனால் மதியம் வரை சபையை ஒத்திவைத்தார்.

பின்னர் எங்களை அவரது அறைக்கு அழைத்து பேசினார். அப்போது, வேண்டுமென்றே சட்டையை கிழித்துக்கொண்டு நீலிக்கண்ணீர் வடித்தார். நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து கொள்வதாக கூறினேன். அத்துடன், மறைமுகமாக வாக்குச்சீட்டு அடிப்படையில் வாக்கெடுப்பை நடத்தும்படி கேட்டுக்கொண்டேன்.

அதன்பின்னர், அவைக்கு சபாநாயகர், தனது நிலையில் இருந்து மாறாமல் ஏற்கனவே சொன்னதையே திரும்பத் திரும்ப சொன்னார். இதனால் நாங்கள் உள்ளேயே அமர்ந்து அறப்போராட்டத்தில் ஈடுபட்டோம். அதனால் பலவந்தமாக எங்களையெல்லாம் அடித்து துன்புறுத்தி, துணை கமிஷனர் சேஷசாயி உத்தரவின் அடிப்படையில் எங்களை குண்டுக்கட்டாக தூக்கி, அடித்து உதைத்து வெளியேற்றினார்கள்.

ஏற்கனவே உள்காயங்கள் ஏற்பட்டிருந்த நிலையில், இப்போது வெளிக்காயமும் ஏற்பட்டிருக்கிறது. நடந்த சம்பவத்தை விளக்கமாக எழுதி, சபையை ஒத்திவைக்கும்படி இப்போது கடிதம் எழுதி சபாநாயகரிடம் கொடுத்துவிட்டு வந்துள்ளோம்.
கவர்னரை நேரடியாக சந்தித்து புகார் அளிக்க உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார் ஸ்டாலின். அப்போது, அவரை பத்திரிகையாளர்கள் படம் எடுக்க முயன்றனர். உடனே காரில் இருந்து இறங்கிய ஸ்டாலின், தனது சட்டை கிழிக்கப்பட்டதைக் காட்டினார். பின்னர் அங்கிருந்து சென்றுவிட்டார்.