கர்நாடக அரசின் தன்னிச்சையான செயலை தடுத்து நிறுத்த வேண்டும்: மு.க.ஸ்டாலின்

232 0

மேகதாதுவில் அணை கட்ட நினைக்கும் கர்நாடக அரசின் தன்னிச்சையான செயலை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது உள்ளிட்ட இடங்களில் இரு அணைகள் கட்டும் திட்டத்திற்கு கர்நாட அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. இறுதி தீர்ப்பின் படி கொடுக்க வேண்டிய காவிரி நதி நீரை கொடுக்காமலும், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டாலும் மறுத்து வரும் கர்நாடக அரசு, ஒவ்வொரு முறையும் நடுவர் மன்றத்தால் வெளியிடப்பட்ட இறுதி தீர்ப்பிற்கு எதிராகவும், விரோதமாகவும் செயல்பட்டு வருவது கூட்டாட்சி தத்துவத்தை மதிக்காத அம்மாநில அரசின் போக்கை காட்டுகிறது.

முதலில் சிவசமுத்திரம் ஆற்றுப் போக்கு நீர் மின் திட்டம் மற்றும் மேகதாது மின் திட்டம் என்றும், பிறகு மேகதாது குடிநீர் திட்டம் என்றும் ஒவ்வொரு பெயர் சூட்டி கர்நாடக அரசு தொடர்ந்து தமிழகத்தின் காவிரி உரிமையை வஞ்சிக்க முற்பட்டு வருவது கவலையளிக்கிறது. மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை மேற்கொள்ளும் போதெல்லாம் தமிழகம் அதை கடுமையாக எதிர்த்து வந்திருக்கிறது.

குறிப்பாக தமிழக சட்டமன்றத்தில் கட்சி வித்தியாசம் பாராமல் 07-10-2013, 05-12-2014, 27-03-2015 ஆகிய காலகட்டங்களில் மேகதாதுவில் எந்த வடிவிலும் புதிய மின் திட்டமோ, குடிநீர் திட்டமோ உருவாக்கக் கூடாது என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனாலும், அண்டை மாநில சட்டமன்றத்தின் உணர்வுகளைக் கூட கர்நாடக அரசு மதிக்க மறுப்பது தமிழக மக்களின் உணர்வுகளை மிகவும் புண்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது.

காவிரி இறுதி தீர்ப்பின் மீதான அனைத்து வழக்குகளையும் மார்ச் 21-ம் தேதியிலிருந்து தினமும் விசாரிப்போம் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவித்துள்ள நிலையில், கர்நாடக மாநில அமைச்சரவை மேகதாதுவின் குறுக்கே அணை கட்டும் திட்டங்களுக்கு அனுமதி வழங்கி, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைக்கு குந்தகம் விளைவிக்க முயற்சிக்கிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, காவிரி இறுதி தீர்ப்பின்படி தண்ணீர் திறந்து விடுவது, மேகதாதுவின் குறுக்கே அணைக்கட்டுவது உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலுமே உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு விரோதமாக நடவடிக்கைகள் எடுப்பதை தன் பிரத்யேக அணுகுமுறையாக கர்நாடக அரசு கடைப்பிடித்து வருவது அண்டை மாநிலங்களுடன் இருக்கும் நல்லுறவில் சச்சரவுகளை உருவாக்கும் போக்கு என்றே தி.மு.க. கருதுகிறது. அதிலும் குறிப்பாக, காவிரி இடைக்காலத் தீர்ப்பு வெளிவந்த போது கர்நாடக அரசு காட்டிய அதே அரசியல் சட்ட விரோத நடைமுறையை, தொடர்ந்து பின்பற்றி தமிழக உரிமைகளை நசுக்க பார்ப்பது கண்டனத்திற்குரியது.

ஆகவே மேகதாதுவின் குறுக்கே அணைக்கட்டும் திட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி, உடனடியாக உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு அணுக வேண்டும். இது தொடர்பான வழக்குகள் ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், கர்நாடகாவின் சட்ட விரோத அணை கட்டும் திட்டத்தை தடுத்து நிறுத்த மாநில அரசு அவசர நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, மத்திய அரசின் கவனத்திற்கு புதிதாக அமைந்துள்ள அ.தி.மு.க. அரசு உடனடியாக எடுத்துச் சென்று, கர்நாடகாவின் தன்னிச்சையான இந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்திட வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.