ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை: தமிழக அரசுக்கு வைகோ வலியுறுத்தல்

241 0

தமிழக அரசு உடனடியாக தலையிட்டு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகே நெடுவாசல் உள்ளிட்ட 13 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான திட்ட ஆய்வுக்கு மத்திய அமைச்சரவை 15-ந் தேதி ஒப்புதல் அளித்துள்ளது. ஹைட்ரோ கார்பன் என்பதும், மீத்தேன் எரிவாயு போன்றது தான். மீத்தேன் வாயுக்களின் பொதுப் பெயரே ஹைட்ரோ கார்பன். காவிரி பாசன மாவட்டங்களில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு 2010-ம் ஆண்டு மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு அனுமதி அளித்தது.

விவசாய சங்கங்கள், பொதுமக்களின் அறப்போராட்டங்கள் வெடித்ததாலும், மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகையிடப்பட்டதாலும் மீத்தேன் எரிவாயு திட்டத்தை நிறுத்திவைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. மேலும், மத்திய அரசின் பாறை படிம எரிவாயு (ஷேல் கியாஸ்) திட்டத்தை எதிர்த்தும் பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் வழக்காடி வருகிறோம்.

இந்த நிலையில், மீத்தேன் திட்டத்தையே ஹைட்ரோ கார்பன் திட்டமாக செயல்படுத்தும் வகையில் ஆய்வுக்கான அனுமதியை மத்திய அரசு வழங்கி இருக்கின்றது. தமிழகத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் நிலவளம், நிலத்தடி நீர் வளத்தை அழிக்கும் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட எந்தத் திட்டத்தையும் தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.

எனவே, மத்திய அரசு புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் ஆய்வுக்கான உத்தரவை திரும்பப் பெறவேண்டும். தமிழக அரசு உடனடியாக தலையிட்டு மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.